ஓய்வூதியம் மக்ரோனும் மக்கள் எழுச்சியும்!

ஓய்வூதியச் சீர்திருத்தம் பிரான்சில் முப்பதாண்டு காலப் போராட்டமாகத் தொடர்ந்து வருகின்றது.

இந்தப் பிரச்சினைக்கான முதல் எச்சரிக்கை மணி, 1991 ஆம் ஆண்டு, அன்றைய பிரதமர் மிசேல் ரொக்கார், ஓய்வூதியச் சீர்திருதத்திற்கான தனது வெள்ளை அறிக்கையைச் சர்ப்பித்தபோது ஆரம்பித்தது. கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் கழிந்தும் இந்த ஓய்வூதியப் பிரச்சினை இன்று பூதாகாரமாக உருவெடுத்து நிற்கின்றது.

மக்ரோனின் ஆணையில், 18 மாதங்கள் தயாரிக்கப்பட்டு, கடந்த யூலை மாதம் 18ம் திகதி, ஓய்வூதியச் சீர்திருத்த உயர் ஆணையரான Jean-Paul Delevoye மக்ரோனிடம் சமர்ப்பித்த வெள்ளை அறிக்கை, பெரும் போராட்டத்திற்கான களத்தை ஐந்து மாதங்கள் கழித்துத் திறந்து விட்டுள்ளது.

இமானுவல் மக்ரோன் தனது தேர்தற் பிரச்சாரத்தின் போது, பொதுப் புள்ளி அடிப்படையிலான ஓய்வூதிய முறைமையைக் கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தார். ஆனாலும் ஓய்வூதிய வயது நீடிப்புக் குறித்து வாய் திறந்திருக்கவில்லை.

இதே ஓய்வூதியப் போராட்டம் 1995 ஆம் ஆண்டு வெடித்தபோது, முற்றுமுழுதாகப் போக்குவரத்துக்கள் மற்றும் அரசசேவைகள் 100 சதவீதம் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இம்முறை அனைத்துச் சேவைகளும், போக்குவரத்து உட்பட, தங்களது குறைந்தபட்ச சேவைகளை வழங்கிவருகின்றனர். இதற்குக் காரணம் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி என்பது தான் ஆச்சரியம்.

முன்னைய அனுபவங்களின் அடிப்படையில், நிக்கோலா சார்க்கோசி, 2007 இல், அனத்துப் பொதுச் சேவைகளும், பணிப்புறக்கணிப்பின் போதும், ‘கட்டாயமாகத் தங்களது குறைந்தபட்ச சேவைகளை வழங்கவேண்டும்’ என்ற சட்டத்தினைப் பிரகடனப்படுத்தினார். டியார் 2012 சட்ட அலகின்படி, மேற்கூறிய சட்டத்தினை மேலும் வலுப்படுத்தினார். இதுவே இன்று தொடருந்து சேவைகள் உட்பட அனைத்து அரச சேவைகளும், தங்களது குறைந்தபட்ச சேவைகளை வழங்கிவரக் காரணமாக அமைந்துள்ளது..

இதுவரை காலமும் இருந்த ஓய்வூதிய அடிப்படையில், 1957 இல் பிறந்த ஒருவர், 41.5 வருடங்கள் அதாவது 166 காலாண்டுகள் (498 மாதங்கள்) வேலை செய்தால், முழுமையான ஓய்வூதியம், அவரது சிறந்த 25 வருட ஊதியத்தில் இருந்து கணிக்கப்படும். இந்த முறைமையில் ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒருமுறை ஒரு காலாண்டு இலவசமாக இணைக்கப்பட்டது.

இந்த வசந்தகாலம் மெதுவாக மறைய மறைய, 1961 இல் பிறந்தவர் 42 வருடங்கள் என்றும், பின்னர் இது 65 முதல் 67 வயது வரையுமெனப் பூதாகாரமாகி உள்ளது.

இதேநேரம் தொடருந்துப் பணியாளர்கள் உட்பட, பல அரச சேவைகளிற்கு, சிறப்பு ஓய்வூதியச் சலுகைககள் வழங்கப்பட்டு வந்தன. இதன் மூலம் 55 முதல் 58 வயதிற்குள்ளேயே ஓய்வூதியம் பெறும் வாய்ப்பும் இருந்தன.

இதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக இப்படியான சிறப்பு ஓய்வூதியச் சலுகை வழங்கப்பட்ட 42 பிரிவுகளையும் மக்ரோனின் ஓய்வூதியச் சீர்திருத்தம் இரத்துச் செய்து, தனது பொதுப் புள்ளிஅடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தினைத் தனது, ஓய்வூதிய உயர் ஆணையாளர் மூலம் பிரகடனப்படுத்தி உள்ளார் இமானுவல் மக்ரோன்.

முந்தைய முறைமையில் 42 வருட ஊதியத்தின் 25 வருடங்கள் மட்டுமே கணக்கில எடுக்கப்பட்டதால், இதில் 17 வருடங்கள் வீணடிக்கப்படுகின்றது என்றும், முக்கியமாக இதனால் பெண் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறி, தனது திட்டத்தை அரங்கேற்றி உள்ளார்.

இதன்மூலம் ஒருவர் வேலை செய்ய ஆரம்பித்ததிலிருந்து அவரது ஊதியக் கழிவீடுகள் புள்ளிகளாக மாற்றப்படும். ஓய்வூதிய வயதை எட்டும்போது மட்டுமே அவரது புள்ளிகளிற்கான பெறுமதி கணக்கிடப்படும். இதன் வயதெல்லை எது என்பது இன்னமும் அரசாங்கத்திற்கே குழப்பமாக உள்ளது.

இது 69 இனைத் தாண்டக்கூடும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது. அத்துடன் இதுவரை இருந்த கணிப்பீட்டை விட இது மிகவும் தெளிவற்றதாகவும், மறைமுகமானதாகவும் உள்ளது. 100 ஈரோ உங்களிடம் இருந்து ஓய்வூதியத்திற்காக அரசாங்கம் ஊதியத்தில் கழித்துக் கொண்டால், அது உங்களிற்கு 10 புள்ளிகளை வழங்கும் என்றும் அது வெறும் 5 ஈரோ 50 சதத்தினை மட்டுமே ஓய்வூதியத் தொகையாக இணைக்கும் எனவும் மக்ரோனின் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

இது எதிர்காலத்திற்கான பேரச்சத்தை விதைத்துள்ளது. வாழ்நாள் முழுவதும் வேலை செய்தாலும் 1000 ஈரோவிற்கும் குறைவாகவே ஓய்வூதியத் தொகை அமையும். இது பிரான்சில், ஒவ்வொருவரின் வாழ்வாதாரத்தையும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளிவிடும் அபாயம் கொண்டது.

உழைக்கும் ஒவ்வொரு ஈரோவும், புள்ளிகளாக மாறும் என்ற பிரச்சாரத்தை அரசாங்கம் தொடர்கின்றது.
அத்துடன் 1200 ஈரோவிற்கு மேல் ஓதியம் பெறுபவர்களிற்கு அவர்களின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படும்CSG (Contribution sociale généralisée) எனப்படும் பொதுமைப்படுத்தப்பட்ட சமூகப் பங்களிப்பு என்பது ஜனவரி முதலாம் திகதி 2020 இலிருந்து பெருமளவில் அதிகரிக்க உள்ளது.

மஞ்சள் மேலாடைப் போராளிகளின் கோரிக்கைகளில் ஒன்றாக, 2000 ஈரோவிற்கு மேற்பட்டவர்களிடம் மட்டுமே இந்தக் கழிவீடு இருக்கவேண்டும் என்பதும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகநாள் வேலை செய்தால் மட்டுமே அதிக ஓய்வூதியம் பெற முடியும் என்பது அரசாங்கத்தின் இன்றைய பிரச்சாரமாக உள்ளது.

ஆனால் அதுவும், பெற்ற ஊதியத்தின் 50 சதவீதத்தை மட்டுமே ஓய்வூதியமாகப் பெறும் நிலைதான் உள்ளது.

2012 ஆம் ஆண்டிலிருந்தே ஓய்வுபெறும் போது பெற்ற கடைசி ஊதியத்தின் தொகையிலிருந்து ஓய்வூதியத்தின் தொகையானது குறைந்தே வந்துள்ளது. இது எதிர்காலத்தில் மிகவும் மோசமான நிலையையே அடையும்.
அரசாங்கத்திடம் ஓய்வூதிய உயர் ஆணையாளர் வழங்கிய ஓய்வூதியச் சீர்திருத்தம் அடங்கிய அறிக்கை, பிரான்சின் எதிர்காலத்தை இருளிற்குள் தள்ளும் அபாயம் கொண்டது எனத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

‘ஓய்வூதியம் பெறுபவர்களின் தொகை எவ்வளவு அதிகரித்தாலும், ஓய்வூதியத்தின் தொகையானது, PIB எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 14 புள்ளிகளாக இருக்கவேண்டும். ஆனால் பிரான்ஸ் இதனைத் தாங்கும் சக்தியை, ஜேர்மனி, சுவீடனைத் தொடர்ந்து இழந்துள்ளது’ என பொருளாதார நிபுணர் மிசேல் செம்மூர் தெரிவித்துள்ளமை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

SNCF, RATP உட்பட அரச பணியாளர்களின் சிறப்புத்தகமை ஓய்வூதியத்தில் கைவைத்த அரசாங்கம், சாதாரண தொழிலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. எதிர்காலத்தில் ஓய்வூதியம் என்ற ஒன்றே கேள்விக்குறியாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே இன்று 20 நாட்களைக் கடந்தும் பணிப்புறக்கணிப்பு பிரான்சை மெதுவாக உறைநிலைக்குக் கொண்டு வந்துள்ளது. பண்டிகைக் காலங்களின் விற்பனை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதனால் வியாபாரிகளின் பெரும் எதிர்ப்பையும் அரசாங்கம் சந்திக்க நேர்ந்துள்ளது. இது பிரான்சின் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும் அபாயம் கொண்டது.

பயண இடையூறுகள் பெருமளவில் இருந்தாலும், 74 சதவீதப் பொது மக்களின் ஆதரவு இந்தப் பணிப்புறக்ணிப்பிற்கு உள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 5ம் திகதிப் போராட்டத்தில் எட்டு இலட்சம் மக்கள் கலந்து கொண்டமை எழுச்சியின் அடையாளமாக உள்ளது.

மக்களின் பாரிய எதிர்ப்புகளிற்கு மத்தியிலும், அரசாங்கம் தங்களின் திட்டத்தை நிறைவேற்று
மானால், மக்ரோனின் அரசின் எதிர்காலம் மக்களால் தூக்கியயறியப்படும் என்பது திண்ணம்.

-சோழகரிகாலன்-

நன்றி: ஈழமுரசு


Recommended For You

About the Author: Editor