மணல் அகழ்வோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும்.

மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்துங்கள்! முடியாவிட்டால் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் தயாராக உள்ளதென ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் கூறியிருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொதுமக்கள் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பொதுமக்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜரானார். பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், “மண்கும்பான் பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்றுவந்த நிலையில் பொதுமக்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் இணைந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

எனினும் ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அண்ணளவாக 10 பேர் வரையில் கைது செய்யப்படாமல் உள்ளனர். அவர்களைக் கைதுசெய்ய முடியவில்லை என பொலிஸார் மன்றில் கூறியிருக்கின்றனர். ஆனால் சந்தேகநபர்கள் ஊருக்குள் வந்து செல்வதாகவும், பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.

அதனை முறைப்பாட்டாளர் பிரசன்னத்தில் நீதிமன்றில் வாய்மூல முறைப்பாடாகக் கூறியுள்ளோம். அதனை கருத்தில் எடுத்துள்ள நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கைதுசெய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருப்பதுடன், கைதுசெய்ய முடியாவிட்டால் பகிரங்க பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே இத்தோடு மணல் அகழ்வு நிறுத்தப்படும். என நாங்கள் நம்புகிறோம். மறுபக்கம் கனியவள திணைக்களம் மணல் அகழ்வதற்கான சகல அனுமதிகளையும் இரத்து செய்துள்ளது. எனவே மணலை அகழவும் முடியாது கொண்டு செல்லவும் முடியாது. மணல் மிக முக்கியமான இயற்கை வளம். அதனை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. இந்த விடயத்தில் பொது நன்மைக்காக மக்கள் முன்வந்துள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்