முன்னாள் ஜனாதிபதி முஷரப் மனுத்தாக்கல்!

தேச விரோத வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷரப், லாகூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

86 பக்கங்கள் கொண்ட குறித்த மனுவை முஷரப்பின் வழக்கறிஞர் அசார் சித்திக் தாக்கல் செய்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷரப், பாகிஸ்தானை ஆட்சி செய்தபோது 2007ஆம் ஆண்டு நவம்பரில் அவசர நிலைப் பிரகடனம் செய்தார். இதற்கு எதிராக முஷரப் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு கடந்த 2014ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் டுபாய் சென்ற முஷரப் அங்கேயே தங்கிவிட்டார். தேசத்துரோக வழக்கில் அவர் ஆஜராகாததைத் தொடர்ந்து அவரது கடவுச் சீட்டு மற்றும் அவருக்கு வழங்கப்படும் சில சலுகைகளை முடக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு முதல் முஷரப், தடுபாயில் மருத்துவ சிகிச்சைக்காகத் தங்கியுள்ளார். தேச விரோத வழக்கு தொடர்பான விசாணைக்கு ஆஜராகுமாறு முஷரப்பை பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் மருத்துவச் சிகிச்சையைக் காரணமாகக் கூறி முஷரப் பாகிஸ்தான் திரும்பாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தேசத்துரோக வழக்கில் முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக முஷரப்பின் ஆதரவாளர்கள் நாட்டின் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர். பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ அமைச்சர்களும் வழங்கப்பட்ட தீர்ப்பை விமர்சித்தனர்.

இந்த சூழலில் தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷரப் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor