தமிழர்கள் தேசிய கீதம் பாட வேண்டியதில்லை.

தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என அரசாங்கம் தெரிவித்திருப்பது, தமிழர்கள் தேசிய கீதம் பாட வேண்டாம் என்பதையே எடுத்துக்காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடப்படுமென பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழில் தேசிய கீதம் பாடக்கூடாது என அரசாங்கம் தெரிவித்தால், அதன் கருத்து தமிழர்கள் தேசிய கீதம் பாடவேண்டாம் என்பதையே கூறுகின்றனர்.

தமிழர்கள் தேசிய கீதம் பாடக்கூடாது எனக் கூறினால் அதனை நாம் சந்தோசமாக ஏற்றுக்கொள்வோம்.

தேசிய வாழ்க்கையிலிருந்து தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு பல தசாப்தங்கள் கடந்துள்ளன.

நியாயமான, ஜனநாயக கோரிக்கைகள் ஏற்கப்படாமையின் காரணமாகவே தேசிய வாழ்க்கையிலிருந்து எம்மை விளக்கியதாக நாம் எண்ணுகிறோம்.

தேசிய வாழ்க்கையிலிருந்து தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவதன் இன்னொரு அடையாளமே தேசிய கீதம் பாட வேண்டாமென அரசாங்கம் கூறுகின்றதாகும்.

தமிழில் தேசிய கீதம் பாடுவதையும் தடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.

இதன்மூலம் ஒரு நாட்டில் உள்ள தேசிய இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை அரசாங்கம் முறியடிக்கின்ற செயற்பாட்டை அரசாங்கம் செய்து வருகிறது” என மேலும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்