தமிழ் மொழி பரீட்சை எழுதிய சிங்கள உப வேந்தர்!

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் கபில பெரேரா மகனுடன் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியமை பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி மத்தேகொடை வித்தியாதீப மத்திய மகாவித்தியாலயத்தில் தந்தை தமிழ் மொழிப் பரீட்சைக்குத் தோற்றிய அதே பரீட்சை மண்டபத்தில் அவரது மகனும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

இந்நிலையில் நான் சாதாரண தர தமிழ் பரீட்சைக்குத் தோற்றியது எனது தொழிலில் பதவி உயர்வு பெறும் நோக்கத்திலோ சம்பள உயர்வு பெறும் நோக்கத்திலோ இல்லை என உபவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

இனங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டுமாயின் ஒருவருக்கொருவர் தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்வது அவசியம் என்றும், அவ்வாறு கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு அந்த இனத்தவர்களுடைய மொழியைக் கற்றிருப்பது மிகவும் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதனூடாக அவர்களது இலக்கியம், கலாச்சாரம் போன்றவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடியும் எனவும் கூறிய உபவேந்தர், நான் தமிழ்மொழி பரீட்சைக்கு தோற்றுவது அந்த நோக்கத்திற்காகவே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

1981ம் ஆண்டில் நான் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றேன். அது மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்காகும். அதேநேரத்தில் நான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். அதிலும் எனக்கு அனுமதி கிடைத்தது. பல்கலைக்கழகம் செல்வதா இல்லை பாதுகாப்பு கல்லூரிக்கு செல்வதா என்று தெரிவு செய்ய நேர்ந்தது. என்னுடைய அதிர்ஷ்டத்திற்கு கொத்தலாவலையில் பயிற்சி பெற்றுக்கொண்டே மொறட்டுவையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்தது. அதனால் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் 19 85ம் ஆண்டில் கொத்தலாவலையில் அதிகாரியானதுடன் 86ம் ஆண்டில் முதலாம் வகுப்பு பட்டமொன்றுடன் அவ்வாண்டின் இரண்டாவது மாணவனாக மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் எனது பட்டப்படிப்பை முடித்து நேராக கடற்படையில் இணைந்து அபீத, டோரா, விக்கிரம போன்ற கப்பல்களில் சேவையாற்றினேன். கடற்படையின் பொறியியல் பிரிவில் சேவையாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் அமேரிக்காவில் PHD வரை கல்வி கற்று 93ம் ஆண்டில் மீண்டும் இலங்கைக்கு வந்து கடற்படையிலேயே இணைந்தேன். 95ம் ஆண்டில் லெப்டினன்ட் கமாண்டராக இருக்கும் போது கடற்படையிலிருந்து விலகி மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பிரிவில் விரிவுரையாளராக இணைந்தேன். அது தொடக்கம் நான் சேவையாற்றியது மொறட்டுவை பல்கலைக்கழகத்திலெனவும் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

கடற்படையில் சேவையாற்றியது யுத்தம் நடைபெறும் காலத்தில் என்பதால், அப்பொழுது தமிழ் மொழியைக் கற்க வேண்டுமென்ற ஆவல் தனக்கு இருந்தபோதும், அதற்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை எனவும் பேராசிரியர் கபில பெரேரா கூறினார்.

அதன்பின்னர் முதன்முதலாக தமிழ் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முயற்சி செய்தது 2014ம் ஆண்டில் என கூறிய அவர், தனது மகளை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லும்போது பிலியந்தல பன்சலையில் SB அழுத்கெதர என்ற ஆசிரியர் நடத்தும் தமிழ் வகுப்புக்கான விளம்பரம் ஒன்றைக் கண்டு அதற்கும் சில நாட்கள் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களில் மின்சார சபையின் உப தலைவராக பொறுப்பேற்றதுடன், மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகவும் கடமையாற்றியதால் அந்த ஆண்டின் பரீட்சைக்கு தோற்றும் சிந்தனையை விட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தனது இலக்கை கைவிடாமல் கடந்த ஜுலை மாதம் தமிழ் பரீட்சைக்கு தோற்றுவதற்கு விண்ணப்பித்ததன் பின்னர் தனியாக தமிழ்மொழியைக் கற்கும் முயற்சியில் இறங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்பரீட்சையில் சித்தியடையவில்லை என்றால் அவமானமாக இருக்கும் என்பதனால் பரீட்சைக்கு சம்பந்தமான அனைத்து பாடப் புத்தகங்களையும் சேகரித்ததுடன் அரசினால் வழங்கப்படும் பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ், முதலாம் இரண்டாம் மூன்றாம் தரங்களின் பாடப் புத்தகங்களையும், எனது மகள் மகன்களுடைய பாடப்புத்தகங்களையும் app ஒன்றையும் அகராதியையும் கையில் வைத்துக் கொண்டு பரீட்சைக்கு தயாரானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தினம் வரையில் பிலியந்தலையில் தமிழ் வகுப்பொன்றிற்குச் சென்றிருந்த நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் இரவில் இடம்பெற்ற வகுப்பை பகலில் நடத்தியதால அந்த வகுப்பிற்கும் என்னால் செல்ல முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு தனியாக தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டிருந்த பேராசிரியர் , ஒவ்வொரு நாளும் காலையில் உடற்பயிற்சிக்காக நடந்து செல்லும் போது எனது கையடக்க தொலைபேசியில் ஒற்றைச் சொற்கள், எதிர்சொற்கள் என்பவற்றை படம் பிடித்து அதனை படித்துக்கொண்டு நடப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பரீட்சை அன்று தனது மகனுடன் பரீட்சைக்கு சென்ற பேராசிரியர் கபில பெரேராவுக்கு இன்னும் பல அதிசயமான நிகழ்வுகள் காத்திருந்தன.

“பரீட்சை மண்டபத்தில் எனக்குப் பின்னால் தான் என்னுடைய மகன் அமர்ந்திருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் பரீட்சைக்கு தோற்றினோம். அது ஒரு விநோதமான அனுபவமாக இருந்ததாகவும் அவர் குறிபிட்டுள்ளார்.

உப வேந்தராக சா.தரத்திற்கு தோற்றுகிறேன் என்று எனக்குத் தோன்றவில்லை. சாதாரண மாணவன் ஒருவன் பரீட்சைக்கு தோற்றுவது போலவே எனக்குத் தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடக்கில் சென்று சேவையாற்றுவதற்கு தனக்கு மிகவும் விருப்பமாக உள்ளதாக தெரிவித்த அவர், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் பேசாத ஒரு இடத்தில் தங்கியிருந்து தமிழ் கற்க வேண்டும் என்றும், அதனால் தான் தான் சா. தரத்திற்கு தோற்றியதாகவும் கூறியுள்ளார்.

அதோடு பரீட்சை முடிந்ததற்காக நான் தமிழ் கற்பதை நிறுத்த மாட்டேன். என்னிடம் பேச்சுத் தமிழ் புத்தகங்கள் உள்ளன. அவற்றை வைத்து நான் எப்படியாவது தமிழ் பேசுவதற்கு கற்றுக் கொள்வேன் எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் வாழ்க்கையில் பெற்ற அனைத்து வெற்றிக்கு பின்னாலும் இருந்தது தான் கற்ற கல்வியே எனக்கூறிய உபவேந்தர், நாம் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கல்வி கற்கக்கூடாது என்றும் கற்பதை விருப்பத்துடன் கற்க வேண்டுமென்றும் உபவேந்தர் கபில பெரேரா கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor