மன்னாரில் துப்பாக்கி சூடு – குடும்பஸ்தர் பலி

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா (வயது -41) என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குடும்பஸ்தர் மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், உயிலங்குளம் சிறுநீலாசனை பகுதியில் தனிமையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையிலே குறித்த குடும்பஸ்தர் தங்கியிருந்த வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில்  சுடப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை பார்வையிட்டனர். பின்னர் விசேட தடயவியல் நிபுனத்துவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதோடு, சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்