
நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்ன குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன நாரஹேன்பிட்டி லங்கா தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (வியாழக்கிழமை) இரவு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் குழுவொன்று லங்கா வைத்தியசாலைக்கு சென்று அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு முயன்றபோதும் அது முடியவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, ராஜிதவிற்கு சிகிச்சையளிக்கும் விசேட வைத்திய நிபுணரிடம் நேற்று நள்ளிரவு வரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக இவருக்கு எதிராக நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை கைது செய்வதற்கு பொலிஸார் வலைவீசி வருகின்றனர். அதற்கமைய கொழும்பில் உள்ள ராஜித சேனாரட்னவின் வீட்டில் பொலிஸ், சி.ஐ.டி. மற்றும் விசேட அதிரடிப் படையினர் நேற்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்நிலையிலேயே நாரஹன்பிட்டியில் உள்ள லங்கா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.