தமிழர்களுக்கு வழிகாட்டும் ஒரு புதிய தேசத்தின் உதயம்!

பசிபிக் பெருங்கடல் நாடான பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த பூகான்வீல் தீவு (Bougainville) தனி நாடாக மாறுவதற்கான முழுத் தகுதியைப் பெற்றுக்கொண்டுள்ளது. சாலமான் தீவுகளில் மிகப்பெரிய தீவு பூகான்வீல்.

சுமார் 10 ஆயிரம் சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட இத்தீவில், சுமார் மூன்று இலட்சம் வரையான பூர்வகுடி மக்கள் வாழ்ந்து வருகின்றார்.

தங்கள் மண்ணைத் தாங்களே ஆழவேண்டும் என்ற இவர்களின் நீண்ட நெடிய ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் கடந்த வாரம் இவர்களுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

இவர்களின் தீவு தனிநாடு என்று அறிவிப்பதற்கான முழுத்தகுதியைப் பெற்றுள்ளது. இவர்களின் வெற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஏராளமான படிப்பினைகளையும் விட்டுச்சென்றிருக்கின்றது.

மேற்கத்தேயர்களின் கால்கள் படும்போதே இந்தப் பூமிப் பந்தில் உள்ள ஒரு நாடு உலகின் கண்களுக்குத் தெரியவரும் என்பது 16ம் நூற்றாண்டுகளுக்குப் பின் உலகில் எழுதப்படாத விதியாக இருந்துவந்தது. அப்படித்தான் இந்த பூகான்வீல் தீவும் உலகிற்குத் தெரியவந்தது.

உலகைச் சுற்றி வருவதில் ஆர்வம் கொண்டவர் பிரெஞ்சு கடற்படைத் தளபதியான லூயிஸ் – அந்துவான் டு பூகான்வீல் (Louis-Antoine de Bougainville). இவர் உலகைச் சுற்றி வரும்போது 1768 யூன் 30ல் இந்தத் தீவில் தனது கால்களைப் பதித்தார்.

அத்தீவிற்கு தனது பெயரைச் சூட்டினார். இதனால் இத்தீவிற்கு ‘பூகான்வீல்’ எனப் பெயர் வந்தது. அதன் பின்னர் இந்தத் தீவு ஜேர்மனியால் கொலனித்துவப்படுத்தப்பட்டது.

முதலாம் உலகப்போரின் போது இதனை அவுஸ்திரேலியா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இரண்டாம் உலகப்போர் நடைபெறும் வரை அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது 1942ல் ஜப்பான் இந்தத் தீவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் இந்தீவில் வாழ்ந்தவர்களுக்கு சம்பந்தப்படாத அமெரிக்காவும் – ஜப்பானும் இங்கு கடுமையாக மோதிக்கொண்டன. இந்த மோதலில் தீவின் மக்களும் பெருமளவில் பலியானார்கள். இரண்டாம் உலகப் போர் முடிவில் இங்கு நிலைகொண்டிருந்த 23 ஆயிரம் ஜப்பான் படையினர் போர்க் கைதிகளாகினர்.

1947ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் பப்புவா நியூ கினியா தீவுக் கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு  அவுஸ்திரேலிய நிர்வாகத்தின் மேற்பார்வையில் கொண்டுவரப்பட்டது. இதன்பின்னர் சுதந்திரம் வழங்கப்பட்டபோதுதான் பூகான்வீல் தனது இறையாண்மையை மீண்டும் இழந்தது. ஒரு தனிநாடாக, இருந்த இந்தத் தீவை பப்புவா நியூ கினியாவுடன் ஒருங்கிணைத்து 1975ம் ஆண்டு அவுஸ்திரேலியா சுதந்திரம் வழங்கியது.

பூகான்வீல் அந்த ஒருங்கிணைப்புடன் தன்னை இணைத்துக்கொள்ள மறுத்து 1975ம் ஆண்டே தனது சுயநிர்ணய உரிமைக்கான முயற்சியில் இறங்கியது. தன்னை ‘வடக்கு சாலமன் குடியரசு’ என்று அறிவித்தது.

ஆனால், இந்தச் சுயநிர்ணய உரிமைக்கு, தனிநாட்டுப் பிரகடனத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து 1976 ஓகஷ்டில் ஒரு உள்நாட்டுத் தீர்வு எட்டப்பட்டது.

ஆனால் அந்த உடன்பாடு முறிந்துபோனதால், 1988ம் ஆண்டு சுதந்திரத்திற்கான ஆயுதம் தாங்கிய விடுதலைப் போர் தொடங்கியது. 1998 வரை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த உள்நாட்டுப் போரில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

அந்த நாட்டின் மக்கள் தொகைக்கு இது மிகப்பெரும் இழப்பு. இதனைவிட பெருமளவானவர்கள் உயிரிழப்பைத் தவிர்க்க தீவைவிட்டு அகதிகளாக வெளியேறினார்கள். ஆனாலும் தங்கள் தாயகத்தை அமைக்கும் சுயநிர்ணய விடுதலைப் போராட்டத்தை அந்த மக்கள் கைவிடவில்லை.

1997ம் ஆண்டு நியூசிலாந்தின் முயற்சியினால் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கப்பட்டன. அவுஸ்திரேலிய தலைமையின் கீழ் ஒரு பன்னாட்டு அமைதிக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தப் பேச்சுக்கள் பூகான்வீலின் சுயாட்சிக்கு வழிவகுத்தன.

2001ம் ஆண்டு, பப்புவா நியூ கினியாவிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கான வாக்கெடுப்பு நடத்தவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு, அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 2001ம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து சுமார் 18 ஆண்டுகளின் பின் இதற்கான வாக்கெடுப்புக்கள் கடந்த நவம்பர் 23ம் திகதி முதல் டிசம்பர் 7ம் திகதி வரை நடைபெற்றன. பூகான்வீலை தனி நாடாக அறிவிப்பதா அல்லது (பப்புவா நியூ கினியாவின் ஆளுகைக்கு உட்பட்ட) சுயாட்சிப் பிரதேசமாக அறிவிப்பதா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு இது.

வாக்கெடுப்பின் முடிவுகள் டிசம்பர் 11ம் திகதியன்று அறிவிக்கப்பட்டன. அந்த மண்ணின் 98.31 வீதம் பேர் முழு சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்து பெரும் வெற்றியை அந்த மண்ணின் விடுதலைக்குப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

இந்த முடிவை பப்புவா நியூ கினியா நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இத்தனை வீதமான மக்கள் தனிநாட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதால் பப்புவா நியூ கினியா நாடாளுமன்றம் அதனை நிராகரிக்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்தத் தீவைத் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முனைந்தால் அதுவொரு ஆக்கிரமிப்பாகவே பார்க்கப்படும். எது எப்படியோ உலகின் புத்தம் புதிய நாடாக பூகான்வீல் உருவாகியுள்ளது.

தமிழரின் தாயகத்தை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர்களின் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் சுயநிர்ணய உரிமையுடன் தங்களைத் தாங்கள் ஆளும் இனமாகவே இருந்தனர். 1945ம் ஆண்டு இலங்கைத் தீவை விட்டுப் பிரித்தானியா வெளியேறியபோது, அந்தத் தீவை ஒருங்கிணைத்து சிங்களப் பேரினவாதத்தின் கைகளில் ஒப்படைத்தது.

பூகான்வீல் மக்களைப்போன்று அப்போதே இதற்கு தமிழர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தால் இன்று தமிழர் தேசம் தனித் தேசமாக சுதந்திரத்துடன் இருந்திருக்கும். மாறாக அப்போதைய தமிழ்த் தலைமைகளின் தவறான சிந்தனை, சிங்களவர்களுக்கு அடிமையாக வாழும் நிலைமையை ஏற்படுத்திவிட்டது.

ஆனாலும் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்கு முடிவெடுத்து, கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அகிம்சை வழியிலும், ஆயுதம் வழியிலும் தங்கள் இழந்த தேசத்தை மீட்டெடுத்து தங்களைத் தாங்கள் ஆளும் உரிமைக்காக தமிழ் மக்கள் போராடியே வருகின்றார்கள். இந்தப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்து, இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் தாயகத்தை இழந்துள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சிறிய மக்கள் தொகை கொண்ட, உலகளவில் தொடர்புகளை அதிகளவில் கொண்டிருக்காத பூகான்வீல் தாங்கள் இழந்த நாட்டை மீட்டெடுக்க சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்று தங்கள் விடுதலைக்காக வாக்கெடுப்பு ஒன்றை நடத்தமுடியும் என்றால், உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் இவ்வாறான ஒரு தமிழீழத்திற்கான வாக்கெடுப்பிற்கு இந்த உலகத்தை கொண்டுவரமுடியாதா என்ன?

பப்புவா நியூ கினியாவுடன் பூகான்வீல் தீவை ஒருங்கிணைத்து அந்நாட்டிற்கு தன்னால் ஏற்பட்ட அவலத்திற்கு அவுஸ்திரேலியா இப்போது தீர்வொன்றைப் பெற்றுக்கொடுத்துவிட்டது.

இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அவலத்திற்கு தீர்வுகண்டு அந்த மக்களை சுயநிர்ணய உரிமையுடன் வாழும் நிலையை ஏற்படுத்துவதற்கு, அந்த மக்களுக்கு இவ்வாறான ஒரு அவல நிலை ஏற்படக்காரணமாக அமைந்த பிரித்தானியா என்ன செய்யப்போகின்றது?

இந்தக் கேள்வியை உலகத் தமிழர்கள் எல்லோரும் எழுப்ப வேண்டாமா? பூகான்வீல் தேசத்தின் விடுதலையை அந்நாட்டின் விடுதலையாக மட்டும் பார்த்துக்கொள்ளக்கூடாது, சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் மக்களுக்கு இந்த புதிய தேசத்தின் உருவாக்கம் ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

தமிழர்களும் தங்களின் விடுதலைக்கான வழிகாட்டியாக இந்தத் தேசத்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

நன்றி: ஈழமுரசு


Recommended For You

About the Author: Editor