
கைது செய்வதற்காக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன சரியான நேரத்தில் நீதிமன்றில் முன்னிலையாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அத்தோடு இந்த விடயம் குறித்து யாரும் குழப்பமடையத் தேவையில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
பிணையில் விடுதலையாகிய நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நேற்று (புதன்கிழமை) தளதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“அவர் நீதிமன்ற உத்தரவை மீறப்போவதில்லை. அவருக்கு 30ஆம் திகதி வரை அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதன்படி அவர் செயற்படுவார். முறையாக அவர் செய்ய வேண்டியதைச் செய்வார்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதென்பதற்காக அவ்வாறு செய்யத் தேவையில்லை. சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் தோன்றி விளக்கமளிப்பார். இந்த விடயம் குறித்து யாரும் குழப்பமடையத் தேவையில்லை.
நாங்கள் யாரும் நீதிமன்றத்தை விட்டுத் தப்பிச் செல்லப்போவதில்லை. சவால்களுக்கு முகங்கொடுத்து நாங்கள் முன்னோக்கி செல்வோம்.
அரசியல் ரீதியில் எம்மை முடக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மூலம் நாங்கள் சவாலாகவே இருக்கின்றோமென்றே அர்த்தப்படுகிறது. இது தொடர்பாக நாங்கள் பெருமையடைகிறோம்.
எவ்வாறாயினும் நாங்கள் சுயாதீன நீதித் துறை மற்றும் சுயாதீன பொலிஸ் ஆகியவற்றை உருவாக்கினோம். இதன்படி சட்டம் முறையாக செயற்படுத்தப்படுமென நம்புகிறோம்” என மேலும் தெரிவித்தார்.