
2019ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 120 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 84 சுற்றிவளைப்புகளின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஊருபுவா, பெலே சங்க, அங்குலான ரொஹா, குடு ரொஷான், சொக்கு மற்றும் தெமட்டகொட ருவன் ஆகிய பிரபல பாதால உலகக்குழு தலைவர்களும் அடங்குகின்றனர்.
மாகந்துரே மதூஷ், கஞ்சிப்பானை இம்ரான் ஆகியோர் டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டபோது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
அங்கொட லொக்கா என்பவரின் 7 உதவியாளர்களும் மோதர சங்க என்பவரின் 4 உதவியாளர்களும் கிம்புலாஎல்ல குணா என்பவரின் உதவியாளர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், ஹேஷ், கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் 3000 இற்கும் அதிகமான ரவைகளும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆ.சு.லதீப்பின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த சுற்றிவளைப்புகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.