
காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது மக்களின் நிலைமைகளை வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க நேரில் சென்று ஆராய்ந்துள்ளார். இதன்போது விரைவில் யானை வேலி ஒன்றை அமைப்பதற்கும் உறுதியளித்துள்ளார்.
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ்.வை.எம். ஹனீபா மற்றும் சாய்ந்தமருது சுயேற்சைக் குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் அழைப்பின் பெயரில் புதன்கிழமை அங்கு சென்ற அவர் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் தொடர்பாக ஆராய்ந்தார்.
இது குறித்து ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில், “அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம மக்கள் தினமும் எதிர்கொள்ளும் காட்டு யானை தொல்லை தொடர்பாக இங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அந்த அடிப்படையில் இங்கு நான் வந்துள்ளேன். புதிய ஆண்டில் யானை வேலி ஒன்றினை அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன். எனவே பொதுமக்களாகிய நீங்கள் எமது அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
குறித்த பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சரை இடைமறித்து பொதுமக்களும் தத்தமது பிரச்சினைகளை முன்வைத்து தீர்வுகளை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டனர்.