துருக்கி அகதிகள் படகு விபத்து -07 பேர் பலி

துருக்கியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

துருக்கிக்கு அகதிகளாக 71 பேரை ஏற்றிச்சென்ற படகு கிழக்கு பிட்லிஸ் மாகாணத்தில் உள்ள வான் என்ற ஏரியில் சென்றபோது அந்நாட்டு நேரப்படி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணியளவில்எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

வேன் ஏரியின் வடக்குக் கரையில் இருக்கும் பிட்லிஸ் மாகாணத்தின் அடில்செவாஸ் மாவட்டத்தை நெருங்கியபோது குறித்த படகு விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இறப்பர் படகுகள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் மூலம் 64 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் 7 பேர் உயிரிழந்தனர்.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து துருக்கிக்கு அகதிகளாக வந்தவர்கள் என துருக்கியின் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சொந்த நாட்டில் அடக்குமுறை, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்கா, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து துருக்கி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக பலர் செல்கின்றனர்.

கடல் வழியாக ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் இவர்கள் சில சமயங்களில் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன


Recommended For You

About the Author: ஈழவன்