
பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதிகளில் பின்ஃபோன் புயல் தாக்கியதில் 16பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களில் பின்ஃபோன் புயல் கிறிஸ்மஸ் தினத்தன்று தாக்கியது.
பின்ஃபோன் புயல் காரணமாக காற்று மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதில் மின்சாரக் கம்பிகள் பல இடங்களில் விழுந்து மின்தடை ஏற்பட்டுள்ளது. அத்தோடு, நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால், உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அஞ்சப்படுகின்றது.
இதுதவிர, ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில், அவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்துவருகின்றது.
பிலிப்பைன்ஸை நடப்பு ஆண்டு தாக்கிய 21ஆவது புயல் பின்ஃபோன் இதுவாகும்.
இதற்குமுன்னதாக இம்மாதத் தொடக்கத்தில் கம்முரி புயல், தென் பகுதிகளில் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது