
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில், ரயில் பயணிகளை குறிவைத்து, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பிக்பாக்கெட் அடித்த நபரை ரயில்வே போலீசார் பிடித்து விசாரிததபோது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன..
உத்தர பிரதேச மாநிலம், அலிகார்க் மாவட்டத்தை சேர்ந்தவர் தானேதர் சிங் குஷ்வாகா. இவர் மீது பல மாநிலங்களில் திருட்டு, பிக்பாக்கெட், வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இவரை கடந்த 2007 மற்றும் 2011 ல். தெலுங்கானாவின் பஞ்ஜாரா ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர் . 2015க்கு பிறகு, போலீஸ் பிடியில் சிக்கியது இல்லை.
அவரை போலீசார் தேடி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர், தனது கூட்டாளி அருண் என்பவருடன் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள பாலம் ஒன்றில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, ரயில்வே போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
அருண், அங்கிருந்து தப்பித்து விட குஷ்வாகா மட்டும் சிக்கி கொண்டான்.
இது தொடர்பாக ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் அனுராதா கூறுகையில், 2004 முதல் ரயில்களில் கொள்ளையடித்து வரும் குஷ்வாகா, நீண்ட தூர ரயில்களில் செல்பவர்களை குறிவைத்து திருடி வந்துள்ளார்.
2004 முதல் தற்போது வரை 400 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ள அவர், ரூ.2 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை திருடியுள்ளார்.
ரயிலில் திருடுவதுடன், சூதாட்டத்திலும் ஈடுபடும் வழக்கம் உள்ளவர் குஷ்வாகா. தனக்கு கிடைக்கும் பணத்தை முதலீடு செய்வதிலும், கிரிக்கெட் சூதாட்டத்திற்கும் பயன்படுத்தியுள்ளார்.
மேலும், சந்தாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 2016 முதல் குடியிருந்து வருகிறார். இதற்காக மாத வாடகையாக ரூ.30 ஆயிரம் செலுத்தி வருகிறார்.
தனது இரண்டு குழந்தைகளை, சர்வதேச பள்ளி ஒன்றில், ஆண்டு கட்டணமாக தலா ரூ.2 லட்சம் செலுத்தி படிக்க வைத்து வருகிறார். அவரிடம் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.27 லட்சம் மதிப்பு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
உயரதிகாரிகள் கூறுகையில், ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி அல்லது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில், டிக்கெட் வாங்கி பயணிக்கும் குஷ்வாகா, ஒவ்வொரு பயணத்தின் போதும் ரூ.20 ஆயிரம் மதிப்பு நகை மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு மாதமும் 8 முறை ரயிலில் பயணித்து கொள்ளையடிப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.