சச்சினின் பாதுகாப்பு ரத்து; மஹா., அரசு முடிவு

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டு வந்த ‘எக்ஸ் ‘ பிரிவு பாதுகாப்பை மஹாராஷ்டிரா மாநில அரசு வாபஸ் பெற்று கொண்டது. அதேநேரத்தில், முதல்வர் உத்தவின் மகன் ஆதித்யா தாக்கரேவின் பாதுகாப்பு ‘ஒய் பிளஸ்’ பிரிவிலிருந்து ‘ இசட்’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பில் இருந்த டெண்டுல்கருடன் 24 மணி நேரமும், போலீஸ்காரர் பாதுகாப்பில் இருப்பார். தற்போது அந்த பாதுகாப்பு திரும்ப பெற்று கொள்ளப்படுகிறது.

அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படலாம். சிவசேனா எம்.எல்.ஏ.,வும் முதல்வரின் மகனுமான ஆதித்ய தாக்கரேவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ‘ஒய்’ பிரிவிலிருந்து ‘ இசட்’ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பா.ஜ., மூத்த தலைவர் ஏக்நாத் காட்சேவுக்கு வழங்கப்பட்டு வந்த ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. உ.பி., முன்னாள் கவர்னர் ராம்நாயக்கிற்கு வழங்கப்பட்டு வந்த ‘ இசட் பிளஸ்’ பாதுகாப்பு ‘எக்ஸ்’ பிரிவுக்கு மாற்றப்படுகிறது.

வழக்கறிஞர் உஜ்வால் நிஜாமுக்கு வழங்கப்பட்ட ‘இசட் பிளஸ் ‘ பாதுகாப்பும் ‘ஒய்’ பிரிவுக்கு மாற்றப்படுகிறது. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு வழங்கப்பட்டு வந்த ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு ‘இசட்’ பிரிவாக அதிகரிக்கப்படுகிறது.

விஐபிகளுக்கான அச்சுறுத்தல் தொடர்பாக நடந்த ஆய்வுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த குழு, ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒரு முறையும் கூடி ஆலோசனை நடத்தும்.

உளவுத்துறை, போலீஸ் ஸ்டேசன்களில் இருந்து கிடைக்கும் தகவல் அடிப்படையில் பாதுகாப்பு குறித்து முடிவு செய்யப்படும் . 97 நபர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், 29 பேரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது அல்லது குறைக்கப்பட்டுள்ளது. 16 பேரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றார்.


Recommended For You

About the Author: Editor