அனுமதியற்ற கட்டடங்கள் தகர்க்கப்படும்’; ஆளுநர் அதிரடி

கிராமங்கள், நகரங்கள் எதிர்கொள்ளும் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் முகமாக, இயற்கை வழி நீர் வடிந்தோடுவதைத் தடுக்கக் கூடிய அனுமதியற்ற கட்டடங்கள், மதில்கள் என்பனவற்றைத் தகர்க்க வழிவகை செய்யப்படுமென, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் சென்று கண்டறிந்து கொண்ட பின்னர். பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சித்தாண்டி பிரதேசத்துக்கு இன்று (25) விஜயம் செய்த ஆளுநர், சித்தாண்டி முருகன் கோவில் வளாக, பாடசாலைக் கட்டடத்தில்  வைத்து,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு, உலருணவு நிவாரணப் பொதியும் ஆளுநர் நிதியின் கீழ், குழந்தைகளுக்கான பால்மாவும் நுளம்பு வலையையும் வழங்கி வைத்தார்.

இம்மக்களின் குறை, நிறைகளைக் கேட்டறிந்து கொண்டு, மேலும் ஆளுநர் உரையாற்றுகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவையும் இன்னபிற நிவாரணங்களையும் வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இங்கு கள விஜயம் மேற்கொண்டபோது, மக்கள் சார்பான பல பிரச்சினைகள், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஊடாகத் தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தாம் அதிகார மட்டத்தில் வெகுசீக்கிரத்தில் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறிய ஆளுநர், காலாகாலமாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நீர் வடிந்தோட முடியாமல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்களை அகற்ற அதிகார மட்டத்தில் நாம் நடவடிக்கை எடுப்போம் என்றார்.


Recommended For You

About the Author: Editor