யாழ் மாநகர முதல்வருக்கு பார்த்தீபன் பகிரங்க சவால்📋

யாழ் மாநகர முதல்வர் அவர்களுக்கு யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் அவர்களின் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

யாழ்.மாநகர கௌரவ முதல்வர் அவர்கள் நேற்றைய ஊடகவியாளர் சந்திப்பில் சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது.

Smart lamp pole கம்பங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு பிழையான பிறழ்வான கருத்துக்களை தெரிவித்து குழம்பங்களை ஏற்படுத்தி அதனை எதிர்க்கச் செய்கின்றார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்

உண்மையில் கௌரவ முதல்வர் கூறிய கம்பங்களைச் சுற்றி உள்ள மக்களுக்கு யார் பிறழ்வான> பிழையான கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் என்றால் அது அந்த கம்பங்களை அமைப்பவர்களும் அவர்களோடு இணைந்தவர்களும் தான்.

ஏன்எனில் கோபுரங்கள் நிறுவப்படுகின்ற இடங்களில் அதை அமைப்பவர்களிடம் எதற்காக குழி வெட்டுகின்றீர்கள் என்று கேட்ட போது அவர்கள் கூறுகின்ற கருத்து “குடிநீர் குழாய் வேலைக்கு வெட்டுகின்றோம்”. “லைற் பூட்டுவதற்கு வெட்டுகின்றோம்”, “கமரா பூட்டபோகின்றோம்”

“இடி தாங்கி பூட்ப்போகின்றோம்” என்று மட்டுமே சொல்லுகின்றார்கள். ஆனால் அதில் பூட்டப்பட இருக்கும் அன்ரனா பற்றி கூற தயங்குகின்றார்கள் அல்லது மறைக்கின்றார்கள். இது தான் மக்களுக்கு உண்மைகளை மறைத்து பிழையான கருத்துக்களை கூறுத்தொடங்கும் நிகழ்ச்சியின் ஆரம்ப புள்ளி.

இதற்கு இரண்டு உதாரணங்கள்

குருநகரில் நேற்று Smart lamp pole க்கு எதிராக ஒரு மக்கள் போராட்டம் நடைபெற்றது அந்த போராட்டத்திலே கலந்து கொண்ட மக்கள் கூறுகின்றார்கள் “ஏன் இந்த கோபுரத்தை அமைக்கின்றீகள்” என்று கேட்டபோது “நல்ல லைற் வெளிச்சம் வரும் உங்களுக்கு, எனி கமராக்கள் மூலம் பாதுகாப்பு இருக்கும் என்று மட்டும் தான் கூறினார்கள் வேறு எதுவும் கூறவில்லை அதனால் தான் நாங்கள் அனுமதித்தோம்” என்கின்றார்கள். ஆக உங்களுக்கு இனிமேல் நல்ல வெளிச்சம் வரும் என்று அந்த மக்களுக்கு கூறுபவர்கள் ஏன் உங்களுக்கு இனிமேல் நல்ல சிக்னல் வரும் என்று ஏன் கூற தயங்குகின்றார்கள்?

அடுத்த விடயம் என்னும் சுவார்சியம் ஆனது கொழும்புத்துறை துறைமுகத்திற்கு பக்கத்தில் குறித்த கோபுரம் அமைப்பதற்கு குழி அமைக்க முற்பட்ட போது அந்த பகுதி மக்கள் எதற்கு என்று கேட்டதற்கு அவர்கள் “100 அடி உயரத்தில் மின் விளக்கு பொருத்தப்போகின்றோம். கடலில் இருந்து வருகின்ற படகுகளுக்கு கரை தெளிவாக தெரியும். அக் கரையில் இருப்பவர்களுக்கு இக் கரை தெரியும்” என்று கூறினார்களாம். அப்போது மகிழ்ச்சியடைந்த மக்கள் இது தங்களுடைய தொழில் விருத்திக்கான செயற்பாடு என்று எண்ணி தாங்களும் அக் குழிகளை வெட்டுவதற்கு உதவி புரிந்தனர் என்கின்றனர். பின்னர் உண்மை நிலை வெளிவர அவ் மக்களே அதனை மூடிவிட்டனர்.

இதுதான் கௌரவ முதல்வர் அவர்கள் கூறிய கம்பங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு பிழையான பிறழ்வான கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என்பது.
அக மக்களுக்கு பிறழ்வான பிழையான கருத்துக்களை யார் தெரிவிக்கின்றார்கள் என்பதை தங்களுடைய சிந்தனைக்கே விட்டுவிடுவோம்.

அடுத்து கௌரவ முதல்வர் அவர்கள் ‘உலகத்திலேயே இல்லாத தொழில்நுட்பம் யாழ்.மாநகரத்திற்கு வரப்போகின்றதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எது உலகத்திலேயே இல்லாத தொழில்நுட்பம்? கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த முதல் விடயம் வடகொரிய நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள். இரண்டு நாடுகளும் பாம்பும் கீரியும் போல என்பதால், உலக ஊடகங்களின் கவனம் முழுக்க வடகொரிய அணியின் மீதே குவிந்தது. இதற்கடுத்து அதிகம் கவனம் ஈர்த்த ஒரு விடயம் 5G. ஆம், குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடந்த இந்த பியாங்சங் ஒலிம்பிக் கிராமம் தான் உலகிலேயே 5G ரெக்Nனாலஜி முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட இடம்.

ஏன் அதை விட்டு விடுவோம். இலங்கையில் தற்போது யாழ்.மாநகர சபையில் தொழில்நுட்ப கோபுரங்களை அமைத்து வருகின்ற நிறுவனம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் “தெற்கு ஆசியாவின் முதல் 5G தொழில் நுட்பத்தின் செயன்முறை இலங்கையில் பரீசார்த்தம் செய்யப்பட்டது” என்றுள்ளது. ஆக 5G தொழில் நுட்பம் உலகில் மட்டுமல்ல இலங்கையிலும் பரீசார்த்தம் செய்யப்பட்டு விட்டது என்பது நிதர்சனம் எனவே இந் நிலையில் இதனை உலகில் இல்லாத தொழில் நுட்பம் என்று எவ்வாறு கூறமுடியும்?

இன்னொரு கருத்தும் கௌரவ முதல்வர் அவர்களால் கூறப்பட்டது தற்போது மின்விளக்குகள் மற்றும் கமராக்கள் மட்டும் தான் பொருத்தப்படும் என்றும் எதிர்காலத்தில் எங்களுடைய அனுமதியுடன் தான் அன்ரனாங்கள் பொருத்தப்படும் என்று

ஆனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நல்லூர் பின்பகுதியில் உள்ள இக் கோபுரத்தில் 3 அன்ரனாக்கள் பொருத்தப்பட்டன? (மக்களுக்கு மின் விளக்குகள் மற்றும் கமராக்கள் தான் பூட்டப்படுகின்றன என்று கூறப்பட்டாலும் கமராக்கள் பொருத்தப்படும் முன் அன்ரனாக்கள் பொருத்தப்பட்டு விட்டன ) இது எவ்வகையில் ஏற்புடையது? இதற்கான அனுமதி வழங்கப்பட்டதா? இவ் அன்ரனாங்கள்  எவ்வகை தொழில் நுட்பத்திற்குரியது? இதனுடைய Radiation என்ன? என்ற கேள்விகளுக்கான விடைகள் யாது? இக் கேள்விகள் எழும்போது அதற்கு விடை காண்பதற்குத்தான் அவ் அன்ரானாக்கள் பற்றிய ஒரு தொழில்நுட்ப அறிக்கையை கேட்டிருந்தனர்.

கௌரவ முதல்வர் இன்னொரு பேட்டியில் “உறுப்பினர்கள் இவ் தொழில்நுட்ப அறிவை பெறவேண்டும் என்றுதான் உறுப்பினர்களின் கடல்கடந்த பயணத்திற்கு என்று நான் இவ்வாண்டு வரவு செலவுத்திட்டத்தில் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கினேன் அவர்கள் அதனை நீக்கி விட்டாதாகவும்” ஆதங்கம் தெரிவித்திருந்தார்.

10 மில்லியன் ரூபாவை நாம் நிராகரித்தற்கு காரணம் அது மக்களுடைய வரிப்பணம் அந்த பணத்தில் உறுப்பினர்கள் தங்கள் அறிவை மேம்படுத்த வெளிநாடு செல்வது ஏற்புடையதல்ல. அது முடிந்த கதை. அதை இப்போது முதல்வர் அவர்கள் இவ்விடயத்தில் சுட்டிக் காட்டியது ஏன்? இவ்வாறான ஒரு ஒப்பந்தம் எதிர்காலத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது அதற்காகதான் முதலே உறுப்பினர்கள் தொழில்நுட்ப அறிவை பெறவேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வரிப்பணத்தில் இந்த 10 மில்லியன் ஒதுக்கப்பட்டதா என்ற கேள்வியும் ஏழாமல் இல்லை.

நாங்கள் வெளிநாடு சென்று நாம் தொழில்;நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டிய தேவையில்லை. இங்கேயே பல தொழில்நுட்ப வல்லுனர்கள் இருக்கின்றார்கள். இக் கோபுரத்தில் பூட்டப்பட இருக்கின்ற அன்ரனாக்கள் பற்றிய தொழில்நுட்ப அறிக்கையை மறைக்காமல் மறுக்காமல் தாருங்கள் நாங்கள் அதனை தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆராய்ந்து உங்களுக்கு பதில் அளிக்கின்றோம்.

“மாநகரத்தை எழில்மிகு நகரமாக மாற்றுவதற்கு பலமுன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன எல்லா முன்னெடுப்புக்களுக்கும் தடைதான்” என்று கௌரவ முதல்வர் மிகவும் ஆதங்கத்துடனும் கூறியுள்ளார்.

நான் கௌரவ முதல்வர் அவர்களிடம் அவருடைய உரிய சபையில் அங்கம் வகிக்கின்ற ஒரு உறுப்பினர் என்ற ரீதியில் பகீரங்கமாகவே கேட்கின்றேன் “யாழ்.மாநகரத்தை எழில்மிகு நகரமாக மாற்றுவதற்கு எடுத்த முன்னெடுப்புக்கள் எவை? அதில் எந்த எந்த முன்னெடுப்புக்களுக்கு யார் யார் எவ்விதத்தில் தடை விதித்தார்கள் அல்லது ஏற்படுத்தினார்கள் என்பதனை தாங்கள் பகீரங்கப்படுத்த வேண்டும்”.

உலக நாடுகளுக்கு இணையாக எமது மாநகரம் எதிர்காலத்தில் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அபிவிருத்தி என்பது எமது மக்களின் எதிர்காலத்திற்கும் எதிர்கால சந்ததிக்கும் உகந்ததாக இருக்க வேண்டும்.

என்னைப்பொறுத்தவரை தமிழ்மக்கள் முன்னால் வைக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வு போல் அதன் உண்மையான வடிவத்தை உள்ளடக்கத்தை கூறிக்கொள்ளாமல் மக்களிடத்தில் அதற்கான அங்கீகாரத்தை பெற முனைவது போலவே இந்த Smart lamp pole தொடர்பிலும் முன்னெடுக்கப்படுகின்றது. இவ் Smart lamp pole தொடர்பில் மக்களுக்கு மறைக்காமல் அதன் உண்மை நிலையை கூறியிருக்கவேண்டும் பொய்களைச் சொல்லி முதலில் கம்பங்களை நடுவோம் பின்னர் படிப்படியாக ஒவ்வொன்றாக செய்து முடிக்கலாம் என்ற தன்மை மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவாக பார்க்கப்படமாட்டாது.

ஆக ஒப்பந்தத்தில் அனுமதி பெறப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டு ள்ள எவரிடமும் அனுமதி பெற்ற கடிதங்களை கூட சமர்ப்பிக்காமல் சபை உறுப்பினர்கள் கோரிய தொழில்நுட்ப அறிக்கையைக்கூட சமர்ப்பிக்காமல் மாநகர சபை எல்லைக்குள் எந்த எந்த இடத்தில் நிறுவப்படும் என்பது தொடர்பில் யாருக்கும் அறிவிக்காமல் நிறுவப்படும் போது ஏன் என்று கேட்ட பொது மக்கள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுக்கு கூட பொய்யான தகவல்களை வழங்கியும் அவசரம் அவசரமாக இவ் Smart lamp pole கள் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் நிறுவப்படவேண்டியதன் தேவை என்ன?

வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி


Recommended For You

About the Author: Editor