கிம் ஜாங் – ட்ரம்ப் சந்திப்பின்போது என்ன நடந்தது?

வடகொரியா எல்லைக்குள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 02 நிமிடங்கள்……!!
வட கொரியாவும் அமெரிக்காவும் கீரியும் பாம்புமாக இருந்துவந்தன.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் வுன், தொடர்ச்சியாக அணுஆயுத சோதனை, ஹைட்ரஜன் குண்டு சோதனைகளைச் செய்து அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதோடு, கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தையும் ஏற்படுத்தினார்.

இதனால், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் வுன்னும் அடிக்கடி வார்த்தை மோதலில் ஈடுபட்டுவந்தனர்.

இரு தலைவர்களிடத்திலும் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியில் தென் கொரிய பிரதமர் மூன் ஜே இன் ஈடுபட்டார்.

விளைவாகச் சிங்கப்பூரில் முதன்முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்தித்தார்.

பேச்சுவார்த்தையின் முடிவில், வடகொரியா தன் அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்திக்கொள்வதாக வாக்குறுதி கொடுத்தது. வடகொரியா-அமெரிக்கா உறவில் புதிய பாதை தென்பட்டது.

இப்போது, ஜப்பானில் நடந்துவரும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற டொனால்டு ட்ரம்ப், மாநாடு முடிந்ததும் வடகொரிய அதிபர்,’ தன் நாட்டில் இருந்தால் அங்கே சென்று சந்திப்பேன்’ என டொனால்டு ட்ரம்ப் ட்வீட் செய்தார்.

தங்கள் நாட்டுக்கு வரும் அமெரிக்க அதிபரை வரவேற்கத் தயாராக இருப்பதாக, வடகொரிய தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. ஜப்பானில் ஜி 20 மாநாட்டை முடித்த அமெரிக்க அதிபர், தென்கொரியா சென்றார்.

பின்னர் வடகொரியா, தென்கொரிய எல்லையில் ஆயுதம் விலக்கப்பட்ட பகுதியான ட்ரூஸ் கிராமத்துக்கு டொனால்டு ட்ரம்ப் தென்கொரிய பிரதமர் மூன் ஜே இன்னுடன் வந்தார்.

எதிர் எல்லையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் நின்றுகொண்டிருந்தார். தொடர்ந்து, வடகொரிய எல்லைப் பகுதிக்குள் நுழைந்த டொனால்டு ட்ரம்ப் கிம் ஜாங்கை சந்தித்துப் பேசினார்.

இந்த இடத்தில் உங்களைச் சந்திப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை- என்று ட்ரம்ப்பிடம் கிம் ஜாங் கூறினார்.

சுமார் 2 நிமிடங்கள் வரை வடகொரிய எல்லைக்குள் இருந்த ட்ரம்ப் பின்னர் கிம் ஜாங்கை அழைத்துக்கொண்டு தென்கொரியாவுக்குள் வந்தார்.

இரு தலைவர்களும் சிறிது நேரம் மகிழ்வுடன் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். தென் கொரியாவுக்குள் உள்ள ஃப்ரீடம் ஹவுஸ் என்ற மாளிகையில், மூன்று தலைவர்களும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

‘உலகுக்கு இது ஒரு முக்கியமான தருணம்’ என்று சந்திப்புக்குப் பின், ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor