மலேசிய பாடசாலைகளில் மாசு பிரச்சினையால் மாணவர்கள் பாதிப்பு!

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள பாசிர் கூடாங் வட்டாரத்தில் பாடசாலைகள் தொடர்ந்து திறக்கப்பட்டிருக்கும் என்று அந்த மாநிலத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் காற்று மாசு பிரச்சினையால் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலையில் மாநில நிர்வாகம் அந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இந்தநிலையில், பாடசாலைகள் திறக்கப்பட்டது முதல், ஆசிரியர்கள் உட்பட சுமார் 270 பேருக்கு சுவாசப் பிரச்சினைகளும், மயக்கமும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காற்றுத் தரக் குறியீடுகள் வழக்கமான நிலையைக் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

எனினும், பாசிர் கூடாங் பாடசாலைகளுக்கு சமூகமளித்த மாணவர்களுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு காரணமாகப் பாசிர் கூடாங்கில் உள்ள 111 பாடசாலைகள் கடந்த செவ்வாய்க்கிழமை மூடப்பட்டு இன்று திறக்கப்பட்டன.

இன்று காலை 8:30 மணியளவில் 8 க்கும் மேற்பட்ட பாடசாலைகள்களில் மாணவர்கள் மூச்சுத் திணறல், வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாகப் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 130 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்களில் 30 பேரும் 3 ஆசிரியர்களும் சிகிச்சைக்காக மருந்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். எவ்வாறாயினும், பாடசாலைகள் வழக்கம் போன்று இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor