பிரகீத் கடத்தலுடன் சம்பிக்கவிற்கு தொடர்பு.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவத்துக்கு முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே பொறுப்புக் கூற வேண்டுமென சட்டத்தரணியும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபரிடம் தாம் கடந்த 21ஆம் திகதி முறைப்பாடு செய்திருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டில், “மூன்று முக்கிய விடயங்கள் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சம்பிக்க ரணவக்கவை கைது செய்து விசாரித்தால் கடத்தல் சம்பவத்தின் உண்மை வெளிப்படும்.

ரணவக்கவின் நடத்தை குறித்து 2009 டிசம்பர் 8ஆம் திகதி லங்கா இ நியூஸ் இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது. அதில், பிரகீத் எக்னெலிகொட மீது சம்பிக்க ரணவக்க கோபமாக இருப்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் உள்ளன.

ரணவக்கவின் மனைவி நிர்மலா, 2009ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் எக்னெலிகொடவைச் சந்தித்தார் என்றும் ரணவக்க தன்னை எவ்வாறு துன்புறுத்தினார் என்பது பற்றிய தகவல்களை அவருக்கு வழங்கியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கட்டுரை வெளியான பின்னர், அதனை எழுதியவரைக் கண்டு பிடிக்க சம்பிக்க மூன்று நாட்களைச் செலவழித்தார் என்று உதய கம்மன்பில செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த ஊடக சந்திப்பு பற்றிய செய்தி சிங்கள நாளிதழில் வெளியான பின்னர், அந்த நாளிதழ் மீதம் உதய கம்மன்பில மீதும் சம்பிக்க ரணவக்க வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த உண்மைகள் அனைத்தும் எக்னெலிகொட கடத்தலுடன் சம்பிக்க ரணவக்க தொடர்புபட்டுள்ளார் என்பதைக் குறிக்கிறது. இந்த விடயங்கள் அனைத்தும் முறைப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால், எக்னெலிகொடவைக் கடத்தியதாக ஒன்பது போர்வீரர்கள் மீது, சிறப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ரணவக்க இந்த வழக்கில் இருந்து விடுபட்டுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்