இஸ்லாமியர்களுக்கு தடுப்புக் காவல் மையங்களா?

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்புவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று பாஜக தற்போதே பிரச்சாரத்தை துவங்கிவிட்டது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்தை (டிசம்பர் 22) பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்தார்.“

பொதுமக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், “அனைத்து இஸ்லாமியர்களையும் தடுப்புக் காவல் மையத்திற்கு அனுப்பிவிடுவோம் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும், சில அர்பன் நக்சல்களும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்தியாவில் எங்கும் காவல் மையங்கள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. அங்கு இஸ்லாமியர்கள் அனுப்பவும்படமாட்டார்கள்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, “இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் முன்னோர்கள் அனைவரும் இந்நாட்டின் மகன்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி குறித்து அவர்கள் கவலைப்பட வேண்டிய தேவையில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்கள், இந்துக்கள் என இந்தியர்கள் யாருக்கும் எதிரானது கிடையாது” என்று விளக்கிய மோடி, வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தும்போது அவர்கள் மசூதிக்கு செல்கிறார்களா அல்லது கோயிலுக்குச் செல்கிறார்களா என்று நாங்கள் பார்ப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.

“மாணவர்களே…முதலில் உங்களுடைய கல்வியைப் பாருங்கள். நீங்கள் படித்தவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன? என்.ஆர்.சி சட்டம் என்றால் என்னவென்று படித்துப் பாருங்கள்” என்று போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், “சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை பணிக்காக சுமார் 33 ஆயிரம் போலீஸார் உயிர் நீத்துள்ளனர். ஆனால், கருணையே இல்லாமல் தற்போது அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது.

நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் காவலர்களுக்கு மதிப்பு கொடுங்கள். காவலர்கள் எவரின் மதத்தையும் பார்த்து உதவுபவர்கள் அல்ல.

அவர்கள் அனைவருக்குமானவர்கள்” என்று குறிப்பிட்ட பிரதமர், “என் எதிரிகள் என்னை வெறுக்கிறீர்கள் என்றால் என் உருவ பொம்மைகளை எரித்துக்கொள்ளுங்கள். அதற்காக ஏழை மக்களைக் குறிவைக்காதீர்கள். பொது சொத்துகளை சேதப்படுத்த வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்தார்.


Recommended For You

About the Author: Editor