சசிகலா சொத்துக்கள் வாங்கியது இப்படியா?

சசிகலா சொத்துக்கள் வாங்கியது எப்படி என்ற தகவலை வருமான வரித் துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணையும் மேற்கொண்டனர்.

இதனிடையே சசிகலா தாக்கல் செய்த வருமான வரி விவரங்களை வருமான வரி அதிகாரிகள் மறுமதிப்பீடு செய்தனர். வருமான வரி மதிப்பீடு தொடர்பாக சாட்சிகளான தனது உறவினர் கிருஷ்ணபிரியா, வழக்கறிஞர் செந்தில் மற்றும் சில தொழிலதிபர்களிடம் தான் குறுக்கு விசாரணை நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மனுதாக்கல் செய்திருந்தார்.

எனினும், வருமான வரித் துறை தந்த தகவலை ஏற்று, சசிகலா தொடர்ந்த வழக்கினை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வருமான வரித் துறை தரப்பிலிருந்து உயர் நீதிமன்றத்தில், “சசிகலாவின் அண்ணன் மகளான கிருஷ்ண பிரியா வீட்டில் 2017 நவம்பர் 9ஆம் தேதி வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, கிருஷ்ண பிரியா செல்போனில் இருந்து கையால் எழுத்தப்பட்ட இரண்டு காகிதக் குறிப்புகளின் புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் முக்கிய வணிக நிறுவனங்களின் பெயர்கள் சில புள்ளிவிவரங்களுடன் இருந்தன.

2017 அக்டோபர் 8 அன்று அந்த தாளினை புகைப்படங்கள் எடுத்து தனது மொபைலில் கிருஷ்ண பிரியா சேமித்துவைத்துள்ளார். மேலும், பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து பரோலில் வெளிவந்த சசிகலா, தனது இல்லத்தில் தங்கியிருந்தபோது பெறப்பட்ட பல கடிதங்களில் இதுவும் காணப்பட்டதாக கிருஷ்ணப்பிரியா குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா செல்வதற்கு முன்பாக அவற்றை அழிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில் அதில், வணிக நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்ட தொகை மற்றும் வரவு-செலவு விவரங்கள் இருந்துள்ளன.

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளின் விசாரணையில், அது காகித தாளில் எழுதியது வழக்கறிஞர் செந்தில் என்பது கண்டறியப்பட்டதாகவும், தாள்களில் எழுதப்பட்டிருந்தவை பணமதிப்பழிப்பு காலத்தில் சொத்துக்கள் வாங்குவதற்காக நடத்தப்பட்ட பணப்பரிவர்த்தனை என்றும் அவர்கள் அறிக்கை வழங்கியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர், மதுரை கே.கே.நகர் ஆகிய இடங்களில் ஷாப்பிங் மாலும், புதுச்சேரியில் ரிசார்ட்டும், கோவையில் காகித ஆலையும், சென்னைக்கு அருகிலுள்ள ஒரகடத்தில் சர்க்கரை ஆலையும், பழைய மகாபலிபுரம் சாலையில் சாப்ட்வேர் நிறுவனமும்,

50 காற்றாலைகள் கோவையிலும் அமைந்துள்ளதாகவும் வருமான வரித் துறை கூறுகிறது. வழக்கறிஞர் செந்தில் தனது வாக்குமூலத்தில், சசிகலா தன்னை 2016 நவம்பர் மாதம் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்ததாகவும், வாங்கப்பட்ட அனைத்து சொத்துக்களின் உரிமையாளர்களுக்கும் டிசம்பர் மாதம் அட்வான்ஸ் தொகை செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

‘இந்த விவரங்களை ஒரு தாளில் எழுதி, பாதுகாப்பாக வைத்திருக்கும்படி சசிகலா உத்தரவிட்டார். பரோலில் வந்து கிருஷ்ண பிரியா இல்லத்தில் தங்கியபோது, அதனை மீண்டும் சசிகலாவிடம் ஒப்படைத்துவிட்டேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்” என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. எப்படி சொத்துக்கள் வாங்கப்பட்டது? இந்த நிலையில் பணமதிப்பழிப்பின்போது

சசிகலா எவ்வாறு 1674.50 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வாங்கினார் என்ற தகவலையும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. வருமான வரித் துறை தரப்பிலிருந்து சசிகலாவுக்கு 60 பக்கங்கள் அடங்கிய நோட்டீஸை வருமான வரித் துறை அக்டோபர் 15ஆம் தேதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், பணமதிப்பழிப்பின்போது மதிப்பிழந்த ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி ரூ.1674.50 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை எப்படி சசிகலா வாங்கினார் என்பதும், விற்பனையாளர்கள் எவ்வாறு அதனை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தனர் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

இந்த பரிவர்த்தனைகள் நவம்பர் 8ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடந்துள்ளது. புதுச்சேரி ஓசன் ஸ்பிரே ரிசார்ட்டை நிர்வகித்து வரும், பாண்டிச்சேரி லட்சுமி ஜுவல்லரியின் பங்குதாரரான நவீன் பாலாஜியின் வாக்குமூலத்தில், “நான் நடத்திவந்த தொழில்களில் ஏதும் முன்னேற்றம் இல்லை. 2016 மார்ச் மாதம் எனது கடன் தொகை மொத்தம் 100 கோடியாக இருந்தது. எனவே, ரிசார்ட்டினை விற்றுவிட்டு நகை வியாபாரத்தில் மட்டும் கவனம் செலுத்த நானும் எனது குடும்பமும் முடிவு செய்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உதவியாளர் குமாரை சந்தித்த நவீன் பாலாஜி, ரிசார்ட்டை விற்றுத்தர உதவும்படி கோரிக்கை வைத்துள்ளார். குமார், சசிகலாவின் வழக்கறிஞர் செந்திலை நவீன் பாலாஜிக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

அதன்பின்னர் நடத்திய பேச்சுவார்த்தையில் ரிசார்ட் 168 கோடிக்கு விலைபேசப்பட்டு, அதில் 148 கோடி ரூபாய் மதிப்பு இழந்த நோட்டுக்கள் மூலம் நவம்பர் 22, 2016 அன்று நவீன் பாலாஜிக்கு அளிக்கப்பட்டுள்ளது. “148 கோடி ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் மூன்று டாடா ஏசிஇ வாகனங்களில் இரவு 10.30 மணிக்கு கொண்டுவரப்பட்டது” என்று நவீன் பாலாஜி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த 148 கோடி ரூபாயில் குமாருக்கு கமிஷனாக 12 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பணம் எண்ணும்போது, 75 லட்சம் ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, நவம்பர் 22ஆம் தேதி எங்களிடம் 135.25 கோடி ரூபாய் இருந்தது என்று நவீன் பாலாஜி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வணிக நிறுவனங்களுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளிலும், குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான தனிப்பட்ட வங்கிக் கணக்குகளிலும் 97 கோடியை டெபாசிட் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மார்க் ரியாலிட்டி லிமிடேட் நிறுவனத்தின் ராமகிருஷ்ணா ரெட்டி அளித்த வாக்குமூலத்தில், மார்க் குழுமத்தின் சொத்துக்கள் மற்றும் பங்குகளை விற்பனை செய்து, 115 கோடி மதிப்புள்ள மதிப்பிழந்த ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டதாகவும், அதில் 10 கோடி இடைத்தரகர்களுக்கு சென்றுவிட்டதாகவும், 115 கோடியில் 6 கோடியை மட்டும் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததாகவும், மீதமுள்ளவற்றை 7 நபர்களுக்கு அளித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பணமதிப்பழிப்பு ரூபாய் நோட்டுக்களை தான் முதலில் வாங்க மறுத்துவிட்டதாகத் தெரிவித்த ராமகிருஷ்ணா ரெட்டி, “என்னுடைய வணிக நலன்களை பாதுகாக்கவும், ஊழியர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்குடனும் அதனை பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரபாத் குரூப் ஆப் கம்பெனியின் ஷிவகான் பட்டேல் அளித்த வாக்குமூலத்தில், தூத்துக்குடி பகுதியிலுள்ள 200 கோடி மதிப்புள்ள 137 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக வழக்கறிஞர் செந்திலுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்று தெரிவித்துள்ளார். அதுபோலவே தேனியில் 100 கோடி மதிப்புள்ள 1897 ஏக்கர் பரப்பளவு கொண்ட எஸ்டேட்டும், எண்ணூர் பகுதியில் 60 கோடி மதிப்புள்ள 16.6 ஏக்கர் நிலமும், காஞ்சிபுரத்தில் 450 கோடி மதிப்புள்ள சர்க்கரை ஆலைகளை வாங்குவதற்கும் பேச்சுவார்த்தை நடந்தது.

இறுதியாக சர்க்கரை ஆலையை மட்டும் ரூ.386 கோடிக்கு விற்பனை செய்வதற்கு ஒப்பந்தம் ஏற்பட்டது. 2016 நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் அவர்கள் அனுப்பிய 286 கோடி ரூபாய் பணமதிப்பழிப்பு நோட்டுக்களை பெற்றுக்கொண்டேன். அதனைத் தொடர்ந்து 164 கோடி ரூபாய் பணமதிப்பழிப்பு நோட்டுக்கள் டிசம்பர் 3, 23 ஆகிய தேதிகளில் வந்தன என்று அவர் தெரிவித்துள்ளார்.

செந்தில் பேப்பர் போர்டு நிறுவனத்தின் இயக்குனர் ஆறுமுகசாமி அளித்த வாக்குமூலத்தில்,கோவையிலுள்ள காகித ஆலையை 600 கோடிக்கு விற்றதாகக் கூறியிருக்கிறார். அதில் 400 கோடி ரூபாய் பணமதிப்பழிப்பு நோட்டுக்கள் மூலமாக செலுத்தப்பட்டுள்ளது.

ஒரு பெட்டியில் 1 கோடி ரூபாய் வீதம் 400 பெட்டிகளில் 400 கோடி ரூபாய் இருந்ததாகவும், கோடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன் என்பவரால் அவை கொண்டுவரப்பட்டதாகவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் மால் வைத்திருக்கும் கங்கா பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் அளித்த வாக்குமூலத்தில், மாலின் பங்குகளை 120 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய விரும்பியதாகத் தெரிவித்தார்.

எனினும், ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். பிறகு 192.5 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டு, அவருக்கு 130 கோடி ரூபாய் பணமதிப்பழிப்பு நோட்டுக்களாக வழங்கப்பட்டுள்ளது.

தனது பங்குகளை சசிகலாவுக்கு விற்க விரும்பவில்லை என்றாலும் கூட, பொதுப் பணித் துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மால்களில் மேற்கொண்டு சோதனைகள் மற்றும் அத்தகைய சோதனைகளால் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் ஆகியவை தன்னை விற்கும் நிலைக்கு தள்ளியதாக கங்கா பவுண்டேஷன் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மிலன் டெக்ஸ்டைல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் அமர் லால்ஜி வோரா அளித்த வாக்குமூலத்தில், 2014-15 முதல் சிறப்பாக செயல்படாத மதுரை கே.கே.நகரிலுள்ள மில்லினியம் மாலை விற்பனை செய்ய முடிவெடுத்திருந்ததாகக் கூறினார்.

தான் விரும்பிய விலை கிடைக்காத நிலையில், ஒரு அரசியல்வாதியால் மட்டுமே மாலை வாங்கமுடியும் என்று கூறி ஒரு பில்டர் தனக்கு செந்திலை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும், அவர் 57 கோடி ரூபாய்க்கு வாங்க விரும்புவதாகவும் அமர் லால்ஜி கூறினார்.

அதற்கான முன் தொகையாக நவம்பர் 2016 அன்று 30 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருமான வரித் துறை தெரிவித்திருக்கிறது. அனைத்து விற்பனையாளர்களும் சொத்துக்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டிருந்தாலும், அதில் வாங்குபவர் என்ற இடத்தில் பெயர் எதுவும் குறிப்பிடப்படாமல் காலியாக இருந்திருக்கிறது


Recommended For You

About the Author: Editor