சீனாவைக் கண்காணிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்!!

இந்திய – பசிபிக் கடல் மண்டலத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் சீனாவின் செயல்பாடுகளை இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணிக்கும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூன் 30) ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டணத்தில் கிழக்குக் கடற்படை அதிகாரிகளுடனான கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், “நமது கிழக்குக் கொள்கையின்மிக முக்கிய அம்சம் குறித்து இந்தியக் கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது என நம்புகிறேன்

நமது அண்டை நாடான சீனா எப்போதும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதுண்டு. நமது கடல்சார் பாதுகாப்பில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என நான் கருதுகிறேன்.

நமது கடற்படை மேலும் வலுவடையும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார். மேலும், கடல்சார் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தேசிய நலனைக் கருத்தில்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.

கடற்படையின் உள்கட்டமைப்புத் திட்டங்களையும், முன்மொழிதல்களையும் ஆய்வு செய்வதற்காகக் கடற்படைத் தலைமையகத்துக்கு இரண்டு நாட்கள் பயணமாக ராஜ்நாத் சிங் சென்றுள்ளார்.

இந்தியப் பெருங்கடலையும், கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடல், தென்சீனக் கடலை உள்ளடக்கிய இந்திய – பசிபிக் மண்டலத்தில் சீனா தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறது. முழு தென்சீனக் கடலையும் சீனா உரிமை கோரி வருகிறது.

அதற்கு எதிராக வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே, தைவான் ஆகிய நாடுகளும் தென்சீனக் கடலில் உரிமை கோரி வருகின்றன.

இந்த நிலையில், சீனாவின் செயல்பாடுகளை இந்தியாவும் கண்காணிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது


Recommended For You

About the Author: Editor