யாழில் சிலைகளை வைப்பதற்கு எதிராக முறைப்பாடு!

சட்டத்துக்கும் வரலாற்றுக்கும் புறம்பாக யாழ்ப்பாணம் சிறைச்சாலை முன்பாக பௌத்த சின்னங்களை வெளிப்படுத்தும் வகையில் சிலைகள் அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராசா ஈசன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் நடராசா லோகதயாளன் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

சிறைச்சாலை முகப்புச் சுவர் ஒன்றில் பௌத்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சங்கமித்தை தோணியின் மூலம் மாதகல் கரையில் வந்திறங்கியதைச் சித்தரித்து ஓவியம் வரையப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இன்று பௌத்த சின்னங்களை வெளிப்படுத்தும் சிலைகளை அமைத்து திறந்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனை அறிந்த பொது மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் இன்றுகாலை அங்கு ஒன்று கூடி எதிர்ப்பு வெளியிட்டதால் குறித்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.

இந்த நிலையில் அங்கு சிலைகளை அமைப்பதைத் தடுக்கக் கோரி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டில் எந்தவொரு நிறுவனத்தின் அனுமதியையும் பெறாமல் அரச திணைக்களம் ஒன்று இவ்வாறு அடாத்தாகச் செயற்படுகின்றதாகவும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor