இலங்கையிடம் தோல்வி அடைந்த வெ.இண்டீஸ்!

வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

எனினும், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிக்காக சேஸிங்கில் போராடிய விதம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்தது.

உலகக்கோப்பை அரையிறுதி செல்லும் வாய்ப்பை இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் இழந்த நிலையில் இந்தப் போட்டி ஆறுதல் வெற்றிக்காக நடந்தது. ஆனால், போட்டியின் முடிவில் 2019 உலகக்கோப்பை தொடரின் சிறந்த போட்டிகளில் ஒன்றாக மாறியது.

இலங்கை பேட்டிங்

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி துவக்கம் முதலே அதிரடியாக ரன் சேர்த்தது.

கேப்டன் கருணாரத்னே மட்டுமே நிதானமாக ரன் சேர்த்தார். அவர் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பெர்னாண்டோ அசத்தல்

அடுத்து பெரேரா 64, பெர்னாண்டோ 104 ரன்கள் சேர்த்தனர். பெர்னாண்டோவின் சதம் இலங்கை அணியை பெரிய ஸ்கோரை எட்டச் செய்தது.

கடைசி கட்டத்தில் திரிமன்னே 33 பந்துகளில் 45 ரன்கள் குவிக்க, இலங்கை அணி 50 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது.

வெ.இண்டீஸ் பந்துவீச்சு

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஓஷேன் தாமஸ், ஹோல்டர், பாபியன் ஆலன் ஓவருக்கு 6 ரன்களுக்குள் கொடுத்தனர்.

மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி இறைத்தனர். காப்ரியல் 5 ஓவர்கள் வீசி 46 ரன்கள் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

கைவிட்ட டாப் ஆர்டர்

அடுத்து சேஸிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களுக்குள் 4 விக்கெட்களை இழந்தது.

அப்போது பேட்டிங் செய்ய வந்த பூரன் போட்டியை தன் கையில் எடுத்துக் கொண்டார். அவருக்கு ஜேசன் ஹோல்டர் 26, பாபியன் ஆலன் ஒத்துழைப்பு அளித்தனர்.

விறுவிறுப்பான சேஸிங்

7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆலன் – பூரன் ஜோடி, இலங்கை பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.

பூரன் தன் முதல் ஒருநாள் போட்டி சதம் கடந்து அசத்தினார். 45 வது ஓவரில் ஆலன், தான் செய்த தவறால் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

முக்கிய விக்கெட்

அதன் பின் பூரன் தனி ஆளாக இலங்கை அணியை மிரட்டினார். எனினும், சுமார் 18 மாதங்கள் கழித்து பந்த வீச வந்த ஏஞ்சலோ மாத்யூசின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார் பூரன்.

அதன் பின் போட்டி இலங்கை கட்டுப்பாட்டிற்கு வந்தது. அது வரை ஓவருக்கு 9-10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடியது.

தோல்வி

வெ.இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பூரன், ஆலன் கூட்டணி மோசமான நிலையிலும், தோல்வி அடையவே அதிக வாய்ப்பு என்று தெரிந்தும் போராடினர். அந்த ஜோடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

 


Recommended For You

About the Author: Editor