
9 மாவட்டங்களில் உள்ள 29 குளங்கள் மற்றும் நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளம், அநுராதபுரம், குருநாகல், அம்பாந்தோட்டை, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலேயே குளங்களும் நீர்த் தேக்கங்களும் இவ்வாறு திறக்கப்பட்டிருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீ ஓயவில் அமைந்துள்ள நீர்த் தேக்க வான் கதவுகள் திறக்கும் பணி மேலும் திறக்கப்படும் என்பதினால் தப்போவ நீர்த் தேக்கத்தில் தாழ் நில பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடும். இதனால் இந்த பிரதேசத்தில் உள்ள மக்களை வெளியேறுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இகினிமிரிய நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் 4 நேற்று இரவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து ஒரு செக்கனுக்கு 13 ஆயிரத்து 200 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது. தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் நேற்று இரவு திறக்கப்பட்டுள்ளது.
இவற்றில் இருந்து ஒரு செக்கனுக்கு 36,000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மகாவலி கங்கையில் மனம்பிட்டி நீர் அளவிடும் பகுதியில் நீர் மட்டம் பாரிய வெள்ளம் ஏற்படும் அளவிற்கு அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இங்கு நீர் மட்டம் 4.14 மீற்றர் அளவில் அதிகரித்துள்ளது.
மீஓய கல்கமுவ என்ற நீர் அளவிடும் பகுதியில் நீர் மட்டம் சிறிய வெள்ளம் எற்படும் அளவிற்கு அதிகரித்துள்ளது. இங்கு நீர் மட்டம் நேற்று இரவு 12 மணியளவில் 6.6 மீற்றர் அளவில் அதிகரித்திருந்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
எடஓய நீர்த் தேக்கத்தின் நீர் மட்டத்தின் காரணமாக சியம்பலாண்டுவ பிரதேசத்தில் வெள்ளம் ஏற்படும் அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த இடத்தில் நேற்று இரவு 12 மணியளவில் நீர் மட்டம் ஓரளவிற்கு குறைந்திருந்ததாக திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்பொழுது நிலவும் மழை மற்றும் சீரற்ற காலநிலையின் காரணமாக 12 மாவட்டங்களில் சுமார் 7,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பல வீதிகளில் வாகன போக்குவரத்தில் தடை எற்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.