அவுஸ்ரேலியாவில் தண்ணீர் திருட்டு!

அவுஸ்ரேலியாவில் பல மாகணங்களில் கடும் வறட்சி நிலவுகின்ற நிலையில், அங்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டுள்ளது.

சிட்னி நகருக்கு மேற்கே ஒரு கிராமமான எவன்ஸ் ப்ளைன்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியிலேயே இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

இது எப்போது நடந்தது என்பது குறித்து இன்னமும் உறுதியான தகவல்கள் கிடைக்காத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனால், குடிநீர் பற்றாக்குறை காரணமாக அவுஸ்ரேலியாவின் சில பகுதிகளில் தண்ணீர் லொரிகள் வந்தால் கூட பொலிஸார் விசாரணை மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘நியூ சவுத் வேல்ஸின் பகுதிகளில் நீடித்த வறட்சி நிலவி வருகிறது. நீர் பற்றாக்குறைதான் சிலரை இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட வைக்கும். மேலும் சமீபத்திய பருவநிலை மாற்ற நிகழ்வுகளும் வறட்சிக்கு காரணம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சிட்னி உள்ளிட்ட பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் அந்நாட்டு அரசு தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பது குறித்து பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாகவும், போதிய மழை இல்லாத காரணத்தினாலும் அங்கு குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. அத்தோடு வனப்பகுதிகளில் தொடர் தீ விபத்து ஏற்படுகிறது.


Recommended For You

About the Author: Editor