சிரேஷ்ட அதிகாரி இலங்கை வருகை!!

சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய்வதற்காக அந்நாட்டு வௌிவிவகார திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இலங்கை வரவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவரான ஜோர்ஜ் ப்ரீடனே இவ்வாறு இலங்கை வரவுள்ளதாக சுவிஸ் வௌிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அனுபவமிக்க இராஜதந்திரியின் தலைமையின் கீழ் கொழும்பு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு சம்பவம் தொடர்பாக தௌிவுபடுத்தும் சந்தர்ப்பத்தை ஆராய முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய கடந்த திங்கட்கிழமை நான்காவது தடவையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவர், அதன்பின்னர் கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், விசேட மருத்துவ நிபுணரிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அங்கிருந்த சில அதிகாரிகளினால் அவர் தேசிய மனநல நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சுமார் 5 மணிநேரத்தின் பின்னர், அங்கிருந்து மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டமை மற்றும் உண்மைக்கு புறம்பான சாட்சியங்களை முன்வைத்தமை முதலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார்.

அதன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor