எனக்கு மரண தண்டனையா?

மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்து பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் வீடியோ வெளியிட்டுள்ளார
பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்த பர்வேஷ் முஷரப், 2007ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளையும் கைது செய்து அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டார். இதற்காக முஷரப் மீது 2013ஆம் ஆண்டு நவாஸ் ஷெரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் அரசு தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது.
இவ்வழக்கின் தீர்ப்பு பெஷாவர் சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த 17ஆம் தேதி வழங்கப்பட்டது. அதில், முஷரப்புக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக இரண்டு நீதிபதிகளும், ஒரு நீதிபதி மாற்றுத் தீர்ப்பையும் வழங்கினர்.
இந்த தண்டனை மிகவும் வேதனையைத் தருவதாக குறிப்பிட்ட பாகிஸ்தான் ராணுவம், நாட்டின் பாதுகாப்புக்காக போர் புரிந்தவர் ஒருபோதும் தேசத் துரோகியாக இருக்க முடியாது என்றும், வழக்கு அவசர அவசரமாக முடிக்கப்பட்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டியிருந்தது.
எனினும், முஷரப் தரப்பிலிருந்து உடனடி ரியாக்‌ஷன் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முஷரப், படுக்கையில் இருந்தபடியே தண்டனை குறித்து இன்று (டிசம்பர் 19) வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார்.
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே தனக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோவில் பேசும்போது, “சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை தொலைக்காட்சிகளில் பார்த்தேன். எப்போதும் நடந்திராத ஒரு வழக்கு இது. வழக்கின் பிரதிவாதியான நானோ அல்லது எனது வழக்கறிஞரோ வாதிட அனுமதிக்கப்படவில்லை.
என்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய ஒரு சிறப்புக் குழு துபாய்க்கு வரலாம் என்று கூட நான் பரிந்துரைத்தேன். ஆனால், எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது” என்று குறிப்பிட்ட முஷரப், இந்த விஷயத்தில் தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், “நீதிமன்றத்தின் தீர்ப்பு சந்தேகத்திற்குரியது என முழுமையாக நான் நம்புகிறேன். ஏனெனில் வழக்கு விசாரணையின்போது சட்ட விதிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. எனக்கு எதிரான சிலரின் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
தனக்கு எதிராக செயல்பட்டவர்கள் தற்போது உயர் பதவிகளை அனுபவித்து வருவதாகவும், அவர்கள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
வழக்கின் தீர்ப்பு நியாயமற்றது என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான் அட்டார்னி ஜெனரல், தீர்ப்பை எதிர்த்து அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor