யாழில்.வழிப்பறி – சந்தேகநபர் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் புன்னாலைக்கட்டுவன் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் இன்று அதிகாலை இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்ய முற்பட்ட சந்தேகநபர் நஞ்சருந்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பலாலி விமானப் படைத் தளத்தில் பணியாற்றும் அலுவலகர் ஒருவர் தனது குடும்பத்தை யாழ்.நகருக்கு பயணம் அனுப்பிவைப்பதற்காக இன்று அதிகாலை 4 மணிக்கு முச்சக்கர வண்டியில் அழைத்து வந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் பலாலி வீதியில் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை மோட்டார் சைக்களில் வந்த மூவர் வழிமறித்துள்ளனர். மூவரும் முகத்தை மறைத்திருந்ததுடன்,  வாளைக் காண்பித்து கொள்ளையடித்துள்ளனர்.

4 அரைப் பவுண் நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டதாக விமானப் படை அலுவலகர் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இதேவேளை உரும்பிராய் பகுதியில் பயணித்த ஒருவரிடம் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் கொள்ளையடித்துள்ளனர். அவரிடம் அலைபேசி, கைக்கடிகாரம் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

உரும்பிராய் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டாளர் வழங்கிய அடையாளத்தின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவரைத் தேடி உரும்பிராய் தோட்டப்பகுதிக்கு சென்ற போது, சந்தேகநபர் தோட்டத்திலிருத்த கிருமி நாசினியை அருந்தி உயிர்மாய்ப்புக்கு முயன்றார்.

அவர் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

சந்தேகநபர் பல கொள்ளைச் சம்பவ்வங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பித்தவர். எனவும் ,  இரண்டு கொள்ளைச் சம்பவங்களையும் ஒரே கும்பலே செய்திருக்கலாம் என  சந்தேகிக்கப்படும் நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்