191 ஓட்டங்களுக்குள் சுருண்ட பாகிஸ்தான், 64 ஓட்டத்துடன் இலங்கை!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணியானது 3 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டத்துடன் உள்ளது.

கராச்சியில்  காலை ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 59.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் அஸாட் சாஹிப் 63 ஓட்டங்களையும், பாபர் அஸாம் 60 ஓட்டங்களையும் அபிட் அலி 38 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஏனைய வீரர்கள் அனைவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஹிரு குமார மற்றும் லசித் எம்புலுதெனிய ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன் பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 64 ஓட்டங்களை பெற்றது.

ஒசத பெர்னாண்டோ 4 ஓட்டத்துடனும், திமுத் கருணாரத்ன 25 ஓட்டத்துடனும், குசல் மெண்டீஸ் 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, மெத்தியூஸ் 8 ஓட்டத்துடனும், லசித் எம்புலுதெனிய 3 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.

 


Recommended For You

About the Author: Milan Milan