இலஞ்சம் பெற்ற அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று!

2020 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம், சட்ட விரோதமான முறையில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பணம் சேகரித்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, குருநாகல் கல்வி வலையத்திற்கு உட்பட்ட பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மாகாண பிரதான செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வடமேல் மாகாணத்திற்கு உட்பட்ட குறித்த பாடசாலையின் மதில் உள்ளிட்ட சில கட்டுமான வேலைகள் செய்யவேண்டியுள்ளதாக தெரிவித்து, அந்த பாடசாலையின் அதிபர் பெற்றோர்களிடம் பணம் சேகரித்துள்ளார்.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு மாகாண கல்வி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள குறித்த அதிபர், முதலாம் தரத்திற்கு இணைத்துக்கொள்ள தகுதி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களிடம், நாட்பது ஆயிரம், முப்பத்தி ஐந்து ஆயிரம், முப்பது ஆயிரம், இருபத்தி ஐந்து ஆயிரம், இருப்பது ஆயிரம் என்ற அடிப்படையில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பணம் சேகரித்துள்ளதாக, பெற்றோர்கள் ஆளுநரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து, குறித்த அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில், மாகாண பிரதான செயலாளர் P.B.M. சிறிசேன அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாடசாலை கட்டணம் தவிர்ந்த வேறெந்த விதமான காரணத்திற்காகவும் பாடசாலை அதிகாரிகளினால் பெற்றோர்களிடம் பணம் அரவிடுவது அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இது போன்று பெற்றோர்கள் சிரமத்திற்கு உள்ளாகும் வகையில் குறித்த அதிபர் பணம் சேகரித்துள்ளமை பாரிய குற்றம் எனவும், அது உறுதி செய்யப்படுமாயின், அதிபருக்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆளுநர் முஸம்மில் மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor