ரயில் மறியல் போராட்டம்: 30க்கு மேற்பட்ட மாணவர்கள் கைது

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மாணவர், மாணவிகள் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் மோகன்குமார் தலைமை வகித்தார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். சட்டத்தை எதிர்த்து போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் பொலிஸாரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக ரயில்நிலையத்துக்குள் நுழைய முயன்றவர்களை பொலிஸார்  கயிறு கட்டி தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 3 மாணவிகள் உள்பட மொத்தம் 36 மாணவர்கள் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடப்பதை தடுக்க டெல்லி செங்கோட்டை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்நிலையிலேயே திருச்சியிலும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாணவர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வட.கிழக்கில் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டங்களில் வன்முறை வெடித்தது. அதைத்தொடர்ந்து, டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம், உத்தரப் பிரதேசத்திலுள்ள அலிகார் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டத்திலும் வன்முறைகள் அரங்கேறின.

அவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியும்,  கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கட்டுப்படுத்தினர். மேலும் ஜாமியா பல்கலைக்கழகத்தில் அத்துமீறி நுழைந்த டெல்லி பொலிஸார் மாணவர்களை கொடூரமாக அடித்து விரட்டியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியை தொடர்ந்து மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.

இன்றும், நாடு முழுவதும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள்,அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன


Recommended For You

About the Author: ஈழவன்