
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ் தேசிய மனநல நிறுவனத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் தொடர்பாக விசேட மனநல வைத்திய நிபுணர்கள் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமைய தேசிய மனநல நிறுவனத்திற்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இந்த விசாரணைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
அதற்கமைய கடந்த திங்கட்கிழமை நான்காவது தடவையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவர், அதன்பின்னர் கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், விசேட வைத்திய நிபுணரிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அங்கிருந்த சில அதிகாரிகளினால் அவர் தேசிய மனநல நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சுமார் 5 மணிநேரத்தின் பின்னர், அங்கிருந்து மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டமை மற்றும் உண்மைக்கு புறம்பான சாட்சியங்களை முன்வைத்தமை முதலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார்.
அதன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.