ரோகித்தின் அதிரடியால் வெற்றியை பதிவுசெய்தது இந்தியா

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 107 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரோகேஷ் ராகுல் ஆகியோர் 227 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக் கொடுத்தனர்.

இந்நிலையில், 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 8 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 102 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரோகேஷ் ராகுல் ஆட்டமிழந்து வெளியேற அணித்தலைவர் விராட் கோஹ்லி ஓட்டமெதுவும் பெறாமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 53 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்க ரிஷப் பந்த் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனிடையே 6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 17 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 159 ஓட்டங்களைப்பெற்று ரோஹித் சர்மா ஆட்டமிழந்து வெளியெறினார்.

இந்நிலையில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 387 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, ஷெல்டன் ஹொற்ரெல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அத்துடன், கீமோ போல், அல்ஷாரி ஜோசப் மற்றும் பொல்லார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், 388 என்ற கடினமான வெற்றியிலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.

இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் மிரட்டலுக்கு மத்தியில் 43.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் 107 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக, ஷை கோப் 78 ஓட்டங்களையும், நிக்கோலஸ் பூரான் 75 ஓட்டங்களையும், கீமோ போல் 46 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் மொஹமட் ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அத்துடன், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் ஷர்தல் தாகுர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று ஒரு போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளைப் பெற்று 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 22ஆம் திகதி  ஒடிசாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்