பொருளாதாரத் தடையை தளர்த்த ஐ.நா.விடம்வலியுறுத்தல்!

வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வேண்டுமென, ஐக்கிய நாடுகள் சபையிடம் ரஷ்யாவும், சீனாவும் வலியுறுத்தியுள்ளன.

வடகொரியாவின் கடல் உணவு மற்றும் ஆடைகள் மீதான ஏற்றுமதித் தடையை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சீனாவும், ரஷ்யாவும் தீர்மானம் முன்மொழிந்துள்ளன.

இந்தத் தீர்மானம் வெற்றி பெற 9 வாக்குகள் தேவைப்படுகின்றன. இந்தத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு எப்போது என்பது குறித்த தகவல் ஏதும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை

இதுகுறித்து தலைநகர் பெய்ஜிங்கில் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷூவாங் கூறுகையில், “கொரிய தீபகற்ப வரலாற்றில், ஒரு முக்கியமானதும், உணர்வுபூர்வமானதுமான காலக்கட்டம் இது. எனவே, பிரச்சினைக்கு உடனடி அரசியல் தீர்வு காண்பதற்கான தேவை மேலும் அதிகரித்துள்ளது.

அந்த தீபகற்பத்தின் இரு நாடுகளுக்கும் இடையே சமாதானம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதன் மூலம் அந்த இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர்ப் பதற்றம் ஏற்படுவதை சர்வதேச நாடுகள் தடுக்க முடியும்” என கூறினார்.

இதேவேளை இதுகுறித்து ஐ.நா.வுக்கான ரஷ்யத் தூதர் கூறுகையில், ‘நாங்கள் எதனையும் அவசரப்படுத்தவில்லை. நாங்கள் இதனை வடகொரியாவின் அணு ஆயுத சோதனையுடன் தொடர்புபடுத்தவில்லை. இது மனிதாபிமான பிரச்சினை’ என கூறினார்.

மேலும், அமெரிக்கா – வடகொரியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதற்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை இருக்கும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், ஐ.நா. தடையையும் மீறி அணு ஆயுதங்களையும், நீண்ட தொலைவு ஏவுகணைகளையும் வட கொரியா சோதித்து வந்தது. அதற்குப் பதிலடியாக ஐ.நா. பாதுகாப்பு சiபியிலும், அமெரிக்காவும் அந்த நாடு மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இந்தச் சூழலில், தனது அணு ஆயுதங்களையும், சக்தி வாய்ந்த ஏவுகணையையும் கைவிடுவதாக வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் கடந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட அமெரிக்க தலைவர் டொனால்ட் ட்ரம்ப், இதுகுறித்து கிம் ஜோங்-உன்னை 3 முறை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடையை உடனடியாகத் தளர்த்த ட்ரம்ப் மறுத்ததையடுத்து, இருதரப்பு பேச்சுவார்த்தை முறிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வட கொரியா அவ்வப்போது சிறிய வகை ஏவுகணை சோதித்து வந்தது. மேலும், தனது ரொக்கெட் ஏவுதளத்தில் 2 சோதனைகளையும் அந்த நாடு மேற்கொண்டது.

அத்துடன், இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்துமஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ளது.

இந்தச் சூழலில், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்தும்படி ஐ.நா.வை சீனாவும், ரஷியாவும் வலியுறுத்தியுள்ளன.


Recommended For You

About the Author: Editor