தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை குறைப்பதற்கு பாரிய சதித்திட்டம்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இனவாதிகள் பாரிய சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கிழக்கு மாகாண ரீதியாக தமிழர்களின் வாக்குவீதம் நாற்பது, முஸ்லிம்களின் வாக்குவீதம் முப்பத்தொன்பது, சிங்களவர்களின் வாக்குவீதம் இருபத்தி மூன்று.

இதில் மாவட்ட ரீதியாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 74 வீதம் தமிழர்கள், 23 வீதம் முஸ்லிம்கள், 01 வீதம் சிங்களவர்கள். இந்த வீதத்தின் அடிப்படையில் நான்கு நாடாளுமன்ற தமிழ் பிரதிநிதிகளை நடைபெறப்போகும் தேர்தலில் பெற முடியும்.

இந்த பிரதி நிதித்தவத்தை குறைப்பதற்கு தமிழ் பகுதியில் இனவாதங்களைப் பேசியும், பல சுயேற்சைக் குழுக்களை உருவாக்கியும், தேசியக்கட்சிகளின் கைக் கூலிகளாகவும் நின்று கொண்டு சிலர் செயற்படுகின்றனர்.

எமது மாவட்டங்களிலுள்ள ஒருசிலர் இவர்களுக்கு கைக்கூலிகளாக சிலவேலைகளை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் பல கோசங்களை முன்வைத்துள்ளனர்.

இனவாதம், அதிகார அரசியல், பணம் பெற்றுக் கொண்டு செயற்படுதல், சலுகைகளை செய்தல், இதன் அடிப்படையில் மத்தியிலும், மாகாணத்திலும் தமிழர்கள் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்குவதே நோக்கமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor