
ஐக்கிய தேசிய கட்சியினால் அரகேற்றப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் நாடகம் பொய்யென்பது அம்பலமாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
“புதிய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சேறு பூசும் விதமாக நடத்தப்பட்ட நாடகமே சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரமாகும்.
இவ்வாறு அரகேற்றப்பட்ட நாடகம் பொய்யென்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுவிஸ் தூதரக ஊழியரை சிறையில் வைத்து விசாரணை செய்வதால் மாத்திரம் இந்த விவகாரத்தில் முழுமையான உண்மையை பெறமுடியாது.
இந்த நாடகத்தை உருவாக்கியது ஐக்கிய தேசியக்கட்சி அதற்கு செயல் வடிவம் கொடுத்தது ராஜித சேனாரத்ன ஆகும்.
இதில் நடிப்பை மாத்திரம் வெளிப்படுத்திய சுவிஸ் தூதரக ஊழியரை மாத்திரம் வைத்து உண்மை தன்மையை கண்டறிய முடியாது.
எனவேதான் இந்த நாடகத்துக்கு முக்கிய காரணமானவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதாவது ராஜித சேனாரத்ன மீது விசாரணை முன்னெடுக்கப்படும். மேலும் சாதாரண மக்கள், சுகயீனங்கள் போது பெற்றுக்கொள்ளும் மருந்துக்கள் விடயத்தில் செய்த மோசடி உள்ளிட்ட பல்வேநு விடயங்கள் தொடர்பாக அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.