இறுதி மூச்சு இருக்கும் வரை அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்

தமிழ் மக்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ் மக்களின் அமோக வாக்குகளினால்தான் 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றிவாகை சூடினேன். அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன்.

பலத்த சவால்களுக்கு மத்தியில் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தோம். அதனை மேலும் முன்னகர்த்த முடியாமல் போய்விட்டது என மனம் வருந்துகின்றேன்.

எனது ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான் அச்சுறுத்தல் இருக்கவில்லை. எவரும் கடத்தப்படவும் இல்லை. அத்துடன் ஊடக சுதந்திரம் முழு அளவில் பேணப்பட்டு வந்தது. அதனால்தான் பல ஊடகங்கள் என்னைக் கண்டபடி விமர்சித்தன.

சில ஊடகங்கள் என்னைப் பைத்தியக்காரனாக்கும் வகையில்கூட செய்திகளை வெளியிட்டிருந்தன. எனினும், நான் பொறுமையுடன் விமர்சனங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டேன்.

எனது ஆட்சிக்காலத்தில் எனது மனச்சாட்சியின்படி நான் நீதியின் வழியில் நடந்தேன். அதேவேளை, நீதித்துறையின் உத்தரவுகளுக்கும் நான் மதிப்பளித்துச் செயற்பட்டேன்.

எனது அரசியல் பயணம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்தப் பயணம் தொடரும். இறுதி மூச்சுவரை அநீதிகளுக்கு எதிராக நான் குரல் கொடுப்பேன்’


Recommended For You

About the Author: ஈழவன்