கைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட சுவிஸ் தூதரக பெண் ஊழியரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் அளிக்க ஆஜரான குறித்த பெண், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து அங்கொடையிலுள்ள தேசிய மனநல சிகிச்சை நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர், மீண்டும் பிற்பகல் 4.00 மணியளவில் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி அங்கிருந்து விடுதலையானார்.

இதனை தொடர்ந்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும், சுவிஸ் தூதரக பெண் ஊழியரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றமை, ஒன்றுக்கொன்று முரணான வாக்குமூலங்களை வழங்கியுள்ளமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்கு அமைய, கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அவர் பிற்பகல் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போதே குறித்த பெண் ஊழியரை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்