
வடக்கு மாகாணத்தில் குடிநீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தொஸிமித் சூ மோட்டிஜிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இதன்போது வடக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை காணும் நோக்கில் அமைச்சரினால் மேற்குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்ற அமைச்சர், கடற்றொழிலினை இலங்கையில் மேலும் வளப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வகையான பங்களிப்புக்ளையும் ஜப்பான் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அத்தோடு கடற்றொழில் ஈடுபடுவோர் அனர்த்தங்களை எதிர்கொள்கின்றபோது, அவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கும் பாதுகாப்பாக மீட்பதற்கும் தேவையான நவீன பொறிமுறையை உருவாக்குவதற்கு தொழில்நுட்பம் மற்றும் படகு வசதிகளை ஜப்பான் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
வடக்கின் குடிநீர் பிர்ச்சினை தொடர்பான கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக தெரிவித்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், அனர்த்தங்களின்போது நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பொறிமுறை தொடர்பாக ஏற்கனவே ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.