அமெரிக்காவை எச்சரிக்கிறது துருக்கி!

அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன், வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதிப்பதாக அச்சுறுத்திவந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன், துருக்கியில் செயற்பட்டு வரும் இரு அமெரிக்க இராணுவ தளங்கள் மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்குள்ள குர்து பகுதிகள் துருக்கி மற்றும் ரஷ்யா கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இதையடுத்து துருக்கியும் ரஷ்யாவும் நட்பு பாராட்டி வந்தன.

இந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்கு துருக்கி ஒப்பந்தம் செய்தது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்காக, ரஷ்யாவிடம் ஏவுகணைகளை கொள்வனவு செய்யக்கூடாது என எச்சரித்தது.

ஆனால், எச்சரிக்கையை மீறி துருக்கி ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டிவந்த நிலையில் துருக்கிக்கு போர் விமானங்களை வழங்கும் செயற்பாட்டை அமெரிக்கா நிறுத்தியது.

அத்தோடு, ரஷ்யாவுடனான நெருக்கம் மற்றும் ஏவுகணை கொள்வனவு நீடித்தால் பொருளாதார தடைகள் விதிக்கப்படுமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் தடைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் துருக்கி ஒரு போதும் அடி பணியாது எனவும் துருக்கி தெரிவித்துள்ளது.

துருக்கியின் இன்கிர்லிக் மற்றும் குரேசிக் பகுதிகளில் அமெரிக்கா விமானப்படைக்கு சொந்தமான இராணுவ தளமும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு ராணுவப் படையான நேட்டோவின் ரேடார் தளமும் இயங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor