
விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை விளைவித்தமை மற்றும் உண்மைத் தகவல்களை மூடி மறைத்து தவறான தகவல்களை வழங்கியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்கா ஜெயரட்ணத்துக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் தனித் தனியே இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் உண்மைத் தகவல்களை மூடி மறைத்து தவறான தகவல்களை வழங்கியமையின் கீழ் சிறிரங்காவுடன் வவுனியா மாவட்ட முன்னாள் மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பேர் எதிரிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.
2011ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார்.
அந்த விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரே வாகனத்தைச் செலுத்திச் சென்றதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
எனினும் சிறிரங்கா ஜெயரட்ணமே வாகனத்தைச் செலுத்திச் சென்றார் என்றும் அவரது சாரத்தியத்தின் தவறே விபத்து ஏற்பட்டு பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது என்றும் பின்னர் இடம்பெற்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சிறிரங்காவைக் காப்பாற்றுவதற்காக வவுனியா மாவட்ட முன்னாள் மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் விசாரணைகளை பிழையான முறையில் முன்னெடுத்ததாகவும் கண்டறியப்பட்டது.
இதுதொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக இந்த வழக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றில் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பை விளைவித்தமை மற்றும் உண்மைத் தகவல்களை மூடி மறைத்து தவறான தகவல்களை வழங்கியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்கா ஜெயரட்ணத்துக்கு எதிராக தனித் தனியே இரண்டு குற்றப்பத்திரிகைகள் வவுனியா மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் உண்மைத் தகவல்களை மூடி மறைத்து தவறான தகவல்களை வழங்கியமையின் கீழ் சிறிரங்காவுடன் வவுனியா மாவட்ட முன்னாள் மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 பேர் எதிரிகளாக இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்குத் தொடுனர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுதர்சன டி சில்வா, அரச சட்டவாதிகள் உதர கருணாதிலக, நாகரட்ணம் நிஷாந்த் ஆகியோர் முன்னிலையாகினர்.
எதிரிகளில் சிறிரங்கா ஜெயரட்ணம் சார்பில் ஜனாதிபதி முருகேசு சிற்றம்பலமும், ஏனைய ஐவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸவும் முன்னிலையாகினர்.
எதிரிகள் ஆறு பேருக்கும் குற்றப்பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்கள் மன்றினால் கையளிக்கப்பட்டன.
“முதலாவது எதிரி சார்பில் மேலும் சில ஆவணங்கள் சட்ட மா அதிபரிடம் கோரப்படவுள்ளன. அது தொடர்பில் மன்றில் விண்ணப்பம் செய்ய வசதியாக வழக்குகளை தவணையிடவேண்டும்” என்று ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் விண்ணப்பம் செய்தார்.
அவரது விண்ணப்பம் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனால் வழக்குகள் வரும் ஜனவரி 13ஆம் திகதிவரை ஒத்திவைகப்பட்டன.
அத்துடன், எதிரிகளை 10 லட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்க வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் உத்தரவிட்டார்.