யாழில்.இளம் பெண் கடத்தல் – பொலிசார் தீவிர விசாரணையில்

யாழில் இளம்பெண்ணொருவர் வீடு புகுந்த குழுவொன்றால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது.

சங்கத்தானையில் குடியிருப்புக்கள் செறிந்து காணப்பட்ட பகுதியில் அந்த பரபரப்பு சம்பவம் நடந்தது. இரவு 10.30 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த கும்பலொன்று இந்த அடாவடியில் ஈடுபட்டது.

மோட்டார்சைக்கிள்களில் வந்த ஆறு பேர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். மதில் பாய்ந்து வீட்டுக்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்த பெறுமதியான பொருட்களை அடித்து நொறுக்கினர். வீட்டிலிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

வீட்டிலிருந்த யுவதியை கடத்திச் செல்ல அந்த கும்பல் முயன்றது. யுவதியை அவர்கள் இழுக்க, மகளை கடத்திச் செல்ல விடாமல் தாயும் இறுகப்பிடித்துக் கொண்டார். ரௌடிகள் கோபமடைந்து தாயை கடுமையாக தாக்கிவிட்டு, யுவதியை இழுத்துச் சென்றனர்.

ரௌடிகள் சுமார் அரை மணி நேரமாக அந்த வீட்டில் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். வீட்டிலிருந்தவர்கள் அரை மணிநேரமாக அவலக்குரல் எழுப்பினர். அந்த பகுதியில் நெருக்கமான குடியிருப்புக்கள் இருந்தபோதும், யாரும் உதவிக்கு வரவில்லை. ரௌடிகள் யுவதியை கடத்திக் கொண்டு அங்கிருந்து சென்ற பின்னரே, அயலவர்கள் அங்கு சென்றனர்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பொலிசார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்