அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி…!

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

நீண்டகாலமாக முடிவுக்கு வராமல் இருந்த அயோத்தி வழக்கில் கடந்த மாதம் 9-ம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும், அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது, மசூதி கட்ட வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டது.


இதற்கிடையில், அயோத்தி தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி சில அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 18 சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில்,இந்த சீராய்வு மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இதில் அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Recommended For You

About the Author: Editor