ரஷ்யாவுக்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் அதில் தலையிடக் கூடாது என ரஷ்யாவுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவுக்கு சென்றுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து உரையாடிய போதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “செர்ஜி லவ்ரோவுடன், உக்ரைன் விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார்.

இதன்போது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தலையிடுவதற்கு ரஷ்யா எந்தவொரு முயற்சிகளையும் செய்யக்கூடாது என அவர் கடுமையாக எச்சரித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ட்ரம்ப் உடனான சந்திப்பிற்குப் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த செர்ஜி லவ்ரோவ், தாங்கள் இருவரும் தேர்தல் குறித்து எந்த விவாதமும் நடத்தவில்லை என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகவும், ட்ரம்பை வெற்றி பெறச்செய்ய ரஷ்ய அதிகாரிகள் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் விவகாரத்தை ஏற்படுத்தியது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ரொபேர்ட் முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு சுமார் 2 ஆண்டு காலம் விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதம் தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததது.

அதில், 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, ட்ரம்போ அவரது பிரசாரக் குழுவைச் சேர்ந்தவர்களோ ரஷ்யாவுடன் சேர்ந்து சதி செய்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor