கட்டப்பஞ்சாயத்து_நடத்தும் முகநூல் நிறுவனம்? (facebook)

கடந்த மாதத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தின் போதும் உலக தமிழர்கள் பலர் பிரபாகரனின் படத்தை தங்களின் முகநூல் மற்றும் டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டனர் அப்படி பதிவிட்ட சில மணி நேரங்களில் முகநூல் நிறுவனம் “Community Standard” என்ற காரணம் காட்டி தலைவரின் படத்தை தூக்கியது.

கடந்த பத்து வருடங்களில் இல்லாத இந்த அடக்குமுறை இப்போது மட்டும் ஏன் முகநூல் நிறுவனத்தால் தமிழர்கள் மீது நடத்தப்படுகிறது என்பதை உலக தமிழர்கள் உணர்ந்து அதற்கேற்ற எதிர் நடவடிக்கைகளை தமிழர்கள் எப்படி மேற்கொள்வது என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்..

#முகநூல்_நிறுவனத்தின்_ஆசிய_பசிபிக்_பிராந்தியத்தின்_நிர்வாக_அமைப்பு_மாற்றம்:
2019 ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் முகநூல் நிறுவனம் தனது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக அமைப்பில் சில மாற்றங்களை கொண்டுவந்தது.

அதன்படி இதுநாள் வரை சிங்கப்பூரை தலைமையகமாக கொண்ட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் இயக்குனர் “டேன் நேரி ” கட்டுப்பாட்டில் இருந்து வந்த இந்திய முகநூல் வாரியம் 2019 ஜனவரி முதல் தனி அமைப்பாக பிரிந்து நேரடியாக காலிஃபோர்னியாவின் மினோல பார்க்கில் இருக்கும் தலைமையகத்திற்கு கீழ் செயல்படும்.

இதன்படி ஆறு இயக்குனர்கள் கொண்ட ஒரு தலைமை குழுவை இந்திய முகநூல் நிர்வாகத்திற்கு அமைத்தது முகநூல் நிறுவனம்.. இந்த ஆறு பேர் யார் இவர்களின் வரலாறு என்ன என்பதை நாம் சற்று ஆராய்ந்தால் தமிழர்கள் வருங்காலத்தில் இந்த சமூக வலைதள நிறுவனத்தின் ஒரு பெரிய ஆபத்திலிருந்தது தப்பித்துக்கொள்ள முடியும்..

1. அஜித் மோகன் (தலைமை நிர்வாக இயக்குனர் )
2. சந்தீப் பூஷன் ( சந்தைப்படுத்துதல் இயக்குனர்)
3. அங்கி தாஸ் ( கொள்கை வகுப்பு இயக்குனர் )
4. பிரசாந்த் அல்லுரு (செயல்பாட்டு இயக்குனர் )
5. மனிஷ் சோப்ரா (தொழில்கூட்டு இயக்குனர் )
6. அம்ரித் அஹுஜா (செய்தி தொடர்பு இயக்குனர் )

மேற்கூறிய ஆறு நபர்களில் தலைமை நிர்வாக இயக்குனரான அஜித் மோகன் மற்றும் கொள்கை வகுப்பு இயக்குனரான அங்கி தாஸ் இவர்கள்தான் மிகவும் முக்கியமானவர்கள். கேரளாவை பூர்விகமாக கொண்ட அஜித் மோகன் கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வீடு வசதி மற்றும் புறநகர் கட்டமைத்தல் அமைச்சரவையிலும், மத்திய திட்ட கமிஷனிலும் நிர்வாக இயக்குனராக இருந்தார்.

2009 இந்திய மத்திய அரசால் ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபிறகு இந்திய இலங்கையில் கண்துடைப்பாக வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில் இயக்குனராகவும் இருந்தவர் இந்த அஜித் மோகன் மேலும் ஈழபடுகொலைக்கு காரணமான அப்போதைய காங்கிரஸ் அரசின் மலையாள அதிகார வட்டத்தில் இருந்த MK நாராயணன் , சிவஷங்கர் மேனன், நிருபமா ராவ் மேனன் போன்றோருடன் நெருக்கத்தில் இருந்தவர் இந்த அஜித் மோகன் .

அடுத்த முக்கிய நபர் இந்திய முகநூல் நிர்வாகத்தின் கொள்கை வகுப்பு இயக்குனர் அங்கி தாஸ். இவர் இந்திய அதிகாரவர்க்கத்தின் பாதுகாப்பு மற்றும் கொள்கை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு முகநூல் நிர்வாகத்தின் இந்திய மற்றும் தெற்காசிய பகுதி கொள்கை வகுப்பாளர் ஆவார்.

இந்திய முகநூல் நிர்வாகம் நிர்வாகரீதியாக தனியாக பிரிக்கப்பட்ட பிறகு இவர் சந்தித்த முதல் நபர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே. இந்த சந்திப்பில் முகநூலில் உலக தமிழர்களால் முன்னெடுக்கப்படும் ஈழப்படுகொலை புலி ஆதரவு போன்ற கருத்துக்களை முகநூல் நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான்.

நம்முடைய கேள்வி என்னவெனில் இந்த அங்கி தாஸ் ராஜ்கபக்ஷேவை சந்தித்த போது ராஜபக்ஷே இலங்கையின் பிரதமரோ ஜனாதிபதியே இல்லை (அப்போது ரணில் விரமசிங்கே பிரதமர், மைத்திரி பாலா சிறிசேனா ஜனாதிபதி). பிறகு எப்படி இவர்கள் இலங்கை சைபர் பாதுகாப்பு போன்ற விவாதத்தை ராஜபக்ஷேவுடன் நடத்தியிருக்க முடியும்.

இதற்கு முக்கிய காரணம் இந்திய அதிகாரவர்கத்திலுள்ளவர்களுக்கும் மஹிந்தவிற்கு ஏற்கனவே உள்ள தொடர்புதான். இந்த தொடர்பு தற்போது இந்திய முகநூல் நிர்வாகத்தின் தலைமையின் மூலம் இணைந்துள்ளது.. இதன் வெளிப்பாடே தமிழர்கள் தேசிய தலைவர் படத்தை முகநூலில் பதியும் போது இவர்களே டிஜிட்டல் இமேஜ் பிராஸஸிங் மூலம் தலைவர் படத்தை முகநூலிருந்து தூக்கிவிடுவது…

பொது_மக்களின்_தரவுகளை_வைத்து_அரசியல்_வியாபாரம்_செய்யும்_முகநூல்:
தனிமனித கருத்து சுதந்திரம் என்பதை தாரகமந்திரமாக கொண்டு துவங்கப்பட்ட முகநூல் நிறுவனம் இன்று ஒவ்வொரு நாட்டிலும் பலகோடி பயனாளர்கள் இவர்களுடன் இணைந்தவுடன் பொதுமக்களின் தரவுகளை வைத்துக்கொண்டு முற்றிலும் வியாபார நோக்குடன் செயல்படுகிறது.

உதாரணமாக பொதுமக்கள் அதிகமாக check-in செய்யும் சுற்றுலா தளங்கள், நாடுகள், நகரங்கள், விமான நிலையங்கள், உணவகங்கள் போன்ற தரவுகளை Business Consulting செய்யும் நிறுவனங்களுக்கு தன சுயலாபத்திற்காக விற்கின்றன. இவர்களே சில hash tag களை trend செய்து மக்களின் விருப்பங்கள் மற்றும் அவர்களின் தரவுகளை சேகரித்து வியாபார நோக்கில் பல கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு விற்கின்றன.

இவர்கள் இந்த தரவுகளை வைத்து பணம் சம்பாதித்தாலும் பரவாயில்லை இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு நாட்டின் பிரதமர் மற்றும் அதிபர்களை தேர்ந்தெடுக்கும் அளவிற்கு கட்டப்பஞ்சாயத்து நிறுவனமாக மாறியிருக்கிறது முகநூல் நிறுவனம்..

#வாக்காளர்களின்_மீது_உளவியல்_தாக்குதல்களை_நடத்தும்_முகநூல்:
கேம்பிரிட்ஜ் அனலிடிக்க எனப்படும் தரவுகளை ஆய்வு செய்யும் நிறுவனம் கிட்டத்தட்ட 5 கோடி அமெரிக்க வாக்காளர்களின் முகநூல் தரவுகளை திருடி வாக்காளர்களின் எண்ணம் மற்றும் உளவியலை புரிந்து அவர்களின் செய்கைகளை கணிக்கும் அதிநவீன மென்பொருள் ஒன்றை உருவாக்கியது.

இந்த நிறுவனத்தின் தலைவர் தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்ற்கு ஆலோசகராக இருக்கும் ஸ்டீவ் பேனேன். இந்த மென்பொருளின் மூலம் யார் ஒருவர் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார் இல்லை யார் வரக்கூடாது என நினைக்கிறார் என்று வாக்காளர்களை பிரித்து அதற்கேற்றாற்போல் ஒவ்வொருவருக்கும் அவர் முகநூல் டைம் லைனில் இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்களோ அவர்களின் புகழ்ப்பாடி பொய்யான தரவுகளை அனுப்பி உளவியல் ரீதியாக தாக்குகிறனர்.

உதாரணமாக நீங்கள் ஒரு விடயத்தை பற்றி கூகுளில் தேடும்போது அந்த தேடப்படும் வார்த்தையை உங்கள் கணினி அல்லது அலைபேசியின் brower cache memory லிருந்து முகநூல் எடுத்து அது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் விளம்பரங்கள் உங்கள் டைம்லைனில் வருவதை கவனித்திருப்பீர்கள் இல்லையா … அதே போன்றுதான் தேர்தல்களிலும் இந்த உத்தியை பயன்படுத்துகிறது முகநூல் நிறுவனம்.

இதே போன்றுதான் அமெரிக்க மற்றும் இந்தியாவை சேர்ந்த தரவுகளை ஆய்வு செய்யும் பல நிறுவனங்கள் இந்திய முகநூல் நிறுவனத்தின் கொள்கைவகுப்பு இயக்குனர் அங்கி தாஸுடன் தொடர்புகளை வைத்துள்ளன.

இதே போல தான் கடந்த ஆண்டு இலங்கை பிராந்தியத்தில் தமிழர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்கள் முகநூலில் உலாவந்து ராஜபக்ஷேவிற்கு ஆதரவான ஒரு பிம்பத்தை சிங்களர்கள் மத்தியில் உருவாக்கியது முகநூல் நிறுவனம்.

இப்போது புரிகிறதா ஏன் இந்த அங்கி தாஸ் ராஜபக்ஷே அதிகாரத்தில் இல்லாதபோது சந்தித்தார் என.. இதே போல பல நாடுகளில் பில்லியன் டாலர் வியாபாரத்தை மேற்கொள்கிறது முகநூல் நிறுவனம்.

தமிழர்கள்_நாம்_செய்ய_வேண்டியது_என்ன?
இந்திய முகநூல் நிறுவனத்தின் தலைமைகள் முழுவதும் இந்திய அதிகாரவர்க்க மாஃபியாக்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. உலக தமிழர்கள் கிட்டத்தட்ட 1 கோடிபேர் முகநூலை பயன்படுத்திவருகின்றனர்.

குறைந்தபட்சம் இந்திய முகநூல் நிறுவனத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்த மாஃபியாக்களை பற்றி கலிஃபோர்னியாவிலிருக்கும் தலைமையகத்திற்கு தெரியப்படுத்தவேண்டும். ஐநாவால் போர்குற்ற விசாரணைக்கு ஆளாக்கப்பட்ட ராஜபக்ஷேவை ஏன் இந்திய முகநூல் இயக்குனர் அங்கி தாஸ் சந்தித்தார் என்பதை பொதுவெளியில் விவாதமாக்க வேண்டும்.

ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்திய முகநூல் வாரியத்தின் சர்வாதிகார போக்கை அம்பலப்படுத்தவேண்டும். தமிழர்களால் மதிக்கப்படும் ஒரு தலைவரின் புகைப்படத்தை ஏன் நீக்கினீர்கள் என்று பொதுவெளியில் கேட்க வேண்டும்..

தமிழர்கள் வெறும் முகநூலை மட்டும் நம்பிருக்காமல் மற்ற சமூக ஊடகங்களிலும் தம் கருத்துக்களை பதிவிட வேண்டும் முடிந்தால் நமெக்கென ஒரு மாற்று சமூக வலைத்தளங்களை உருவாக்கிடவேண்டும்.

தமிழர்_ஆய்வுக்கூடம்
Tamil Research Institute


Recommended For You

About the Author: Editor