மாட்டிறைச்சி கடத்திய கும்பல் வசமாக சிக்கியது!

புங்குடுதீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மாட்டிறைச்சி கடத்திய கும்பல் ஒன்று மண்டைதீவுச் சந்தி காவலரண் பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு இளைஞர்களின் செயற்பாட்டால் நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த திருட்டுச் சம்பவங்கள் சிறிது காலம் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் கயஸ் வாகனம் மூலம் 7 மாடுகளின் இறைச்சி மண்டைதீவுச் சந்தியூடாக யாழ்.சுழிபுரத்திலுள்ள மாட்டிறைச்சி வியாபாரிக்கு விற்பனைக்காக கொண்டுசெல்லப்பட்டது.

இதன்போது மாட்டிறைச்சி கொண்டுச் செல்லப்படும் தகவலை புங்குடுதீவு உலகமைய உறுப்பினர்கள் மண்டைதீவு பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தராஜ்சிற்கு வழங்கியுள்ளனர்.

அவர்கள் வழங்கிய தகவலுக்கமைய மாட்டிறைச்சி கடத்தல் முறியடிக்கப்பட்டு கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்றுறைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அத்துடன் கைதானவர்கள் வழங்கிய தகவலின் பேரில் இறைச்சிக்காக தயார் நிலையிலிருந்த பசு மாடுகளும் புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்திலிருந்து மீட்கப்பட்டன.

இதனையடுத்து இறைச்சி கடத்தலில் ஈடுபட்ட சந்தேநபர்களும் மாட்டிறைச்சியும் கயஸ்வாகனமும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டது.

இதேவேளை கடந்தவருடமும் இதேபோல் புங்குடுதீவுப்பகுதியிலிருந்து மாட்டிறைச்சி கடத்திய கும்பல் கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தீவகத்தில் பலஆயிரக்கணகில் காணப்பட்ட மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதும் கடத்தப்படுவதுமாக இருப்பதனால் தீவகத்தில் கால்நடைகள் பெருமளவில் அழிந்துபோயுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor