
கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பெண் பணியாளரிடம் மூன்று நாட்களாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய குறித்த அறிக்கை நாளை (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த மாதம் 25ஆம் திகதி பணி முடிந்து வீடு திரும்பியபோது சிரியலதா என அழைக்கப்படும் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற உள்நாட்டு தூதரகப் பணியாளர் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, நவம்பர் 27ஆம் திகதி சுவிஸ் தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார்.
இதனையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டுசென்றிருந்தது.
நீதிமன்ற உத்தரவையடுத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவில் கடந்த ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய மூன்று நாட்களும் முன்னிலையாகிய சுவிஸ் தூதரக பணியாளரிடம் நீண்டநேர விசாரணைகள் நடத்தப்பட்டன.
19 மணி நேரம் அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதுடன், சட்டமருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
இவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் சுவிஸ் தூதுவர் அளித்த முறைப்பாடு ஆகியன தொடர்பாக பகுப்பாய்வு செய்யும் குற்றப்புலனாய்வுப் பிரிவு, நாளை நீதிமன்றத்தில் அதுதொடர்பான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளது.
அதேவேளை, இந்தச் சம்பவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதித் திட்டமே என அரசாங்கம் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.