கைலாசாவிற்கு 12 இலட்சம் பேர் விண்ணப்பம்.

கைலாசா நாட்டு குடியுரிமைக்காக 12 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக சாமியார் நித்யானந்தா கூறியுள்ளார்.

இது குறித்து புதிய காணொளிகளை வெளியிட்டுள்ள அவர், “கைலாசா தனி நாடு அறிவித்த பின்னர் அதை வரவேற்று இலட்சக்கணக்கில் இ-மெயில்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இதுவரை 12 இலட்சம் பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தினந்தோறும் 1 இலட்சம் பேர் கைலாசா இணைய தளத்தில் உறுப்பினர்கள் ஆகின்றனர். கைலாசா நாட்டை அமுல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி கார்த்திகை தீபத் திருநாளில் அறிவிக்க உள்ளேன்.

கைலாசா தனி நாடு அறிவிப்புக்கு இவ்வளவு தூரம் வரவேற்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. கைலாசா நாடு அமைக்கவும், சீடர்களுடன் வாழவும் சில நாடுகளின் அரசுகள் அழைப்பு விடுத்துள்ளன.

சில நாடுகளின் அரசுகள் எங்களை அதிகாரப்பூர்வமாக அணுகி கைலாசா நாடு அமைக்க அழைத்துள்ளனர். அவர்களின் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை. விரைவில் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவோம். மிக விரைவில் கைலாசா நாட்டுக்கு இடம் அமையும். அப்படி அமைந்தால் அதுபற்றி அறிவிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது சமீபத்தில் குழந்தைகளை கடத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், அவர் தலைமறைவாகி பல காணொளிகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்